2027-ல் மக்கள் தொகை + ஜாதிவாரி கணக்கெடுப்பு.. அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு
டெல்லி: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 2027 மார்ச் 1 ஆம் தேதியை மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதியாக அறிவித்து மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
இந்தியாவில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதற்கு முன்பாக கடந்த , 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு, இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. இதன்படி , 2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு 5 ஆண்டுகள் ஆகியும் அப்பணி தொடங்கப்படாததால், எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வந்தன. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடந்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய கேபினட் குழு கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்து, கடந்த 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி, சாதிவாரி கணக்கெடுப்புடன், 2027-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடத்தப்படும்.
முதல்கட்டமாக, யூனியன் பிரதேசங்களான லடாக், காஷ்மீர் மற்றும் இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் 2026-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதியை அடிப்படை நாளாக கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். அடுத்தகட்டமாக , நாட்டின் ஏனைய பகுதிகளில், 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அன்றைய தினமே, கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பாணையை, மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம்-1948-ன் 3-வது பிரிவின்படி, வருகிற 16-ந் தேதி அரசிதழில் வெளியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே எடுத்த முடிவின் படி, மக்கள் தொகை நடத்துவதற்காக அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இதழில் இந்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இந்த அறிவிக்கையின் படி நாடு முழுவதும் மக்கள் தொகை 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது என்பதே இதன் சாராம்சம் ஆகும்.












Click it and Unblock the Notifications