"பாகிஸ்தான் உடனான மோதல்.. சில தவறுகளை செய்தோம்.." இந்திய ஜெட்கள் வீழ்த்தப்பட்டது குறித்து முப்படை தலைமை தளபதி
டெல்லி: கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் உடன் நடந்த மோதலின் போது இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து அப்போது எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையே இந்த மோதலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போர் விமானங்களை இந்தியா இழந்தது குறித்து முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே இம்மாத தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான் இந்தியப் பகுதிகளின் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், அதை முறியடித்த இந்தியா, தக்க பதிலடியையும் பாகிஸ்தானுக்குக் கொடுத்தது. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யத் தூது விட்டது.

இந்தியா பாகிஸ்தான்
இந்த மோதலில் இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் மொத்தமாகச் சரணடைந்தது என்பதே உண்மை. அப்போதே இந்த தாக்குதலின் போது இந்தியாவுக்கும் சில இழப்புகள் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. அதேநேரம் அது தொடர்பாக இந்திய ராணுவம் எந்தவொரு தகவலையும் தெரிவிக்காமல் இருந்தது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது இந்திய ராணுவம் முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
மிக முக்கிய தகவல்
அதாவது பாகிஸ்தானுடனான மோதலின்போது குறிப்பிட்ட இந்தியா போர் விமானங்கள் இழந்தது குறித்த கேள்விக்கு தலைமை தளபதி அனில் சவுகான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், சிலர் சொல்வது போல இந்த நான்கு நாள் மோதல் எந்த நேரத்திலும் அணு ஆயுதப் போரின் ஆபத்தை நெருங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "எவ்வளவு ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்பது முக்கியமில்லை அவை ஏன் வீழ்த்தப்பட்டன என்பதுதான் முக்கியம்" என்றார்.
பாகிஸ்தான் சொல்லும் பொய்
இந்தியா பாதுகாப்புப் படையின் 6 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் கூறிய வரும் நிலையில், அது முழுமையாகத் தவறான தகவல் என்பதை அனில் சவுகான் திட்டவட்டமாக மறுத்தார். அதேநேரம் இந்தியா எத்தனை ஜெட் விமானங்களை இழந்தன என்பது குறித்த தகவலை அவர் பகிர மறுத்துவிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எத்தனை ஜெட் விமானங்களை நாம் இழந்தோம் என்பது முக்கியம் இல்லை. ஆனால், ஏன் இந்த ஜெட் விமானங்களை இழந்தோம். நாம் என்ன தவறு செய்தோம் என்பது தான் முக்கியம்.
இதில் நல்ல விஷயம் என்னவென்றால், எங்கள் திட்டத்தில் ஆரம்பத்தில் சில பிழைகள் இருந்தன. அந்த தவறை புரிந்து கொண்டு, அதைச் சரிசெய்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு அதை மீண்டும் செயல்படுத்தினோம். இதன் மூலம் நீண்ட தூர இலக்குகளைக் கூட எங்கள் ஜெட் விமானங்களால் குறிவைக்க முடிந்தது" என்றார்.
அணு ஆயுதம் ஆபத்து எல்லாம் இல்லை
இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் வெடிப்பதைத் தான் தடுத்தாக டிரம்ப் கூறி வருவது குறித்த கேள்விக்கு அனில் சவுகான் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதற்கு அவர் கூறுகையில், "வழக்கமான ராணுவ தாக்குதலுக்கும் அணு ஆயுத போருக்கும் நிறைய இடைவெளி இருப்பதாக நான் நினைக்கிறேன். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரப் பாகிஸ்தானுக்கு வழிகள் எப்போதும் திறந்திருந்தன" என்றார்.
முன்னதாக மோதல் முடிவுக்கு வந்த போதே இந்திய ஜெட் விமானங்களில் பாதிப்பு ஏற்பட்டதா என்ற கேள்வி ஏர் மார்ஷலிடம் கேட்கப்பட்டது. இருப்பினும், அப்போது பதற்றம் தொடர்ந்து வந்ததால்.. தான் கூறும் கருத்து எதிரிக்குச் சாதகமாகப் போய்விடலாம் எனச் சொல்லி எந்தவொரு தகவலையும் அளிக்க ஏர் மார்ஷல் மறுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications