எவ்வித உதவிகளையும் செய்ய தயார்.. ஆனால் தடுப்பூசி தேவை என இந்தியா கேட்கவில்லை.. அமெரிக்கா விளக்கம்
டெல்லி: கொரோனா பரவல் காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசிகளை அளித்து அமெரிக்கா உதவவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படும் நிலையில், இந்தியா தங்களிடம் தடுப்பூசி தேவை என எவ்வித கோரிக்கைகளையும் முன் வைக்கவில்லை என அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலையின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே தினசரி வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது. இருப்பினும், தடுப்பூசியின் மூலப் பொருட்களின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ளதால், தேவைக்கு ஏற்றபடி இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அமெரிக்க எம்பிகள்
இந்தியாவில் நிலைமை மோசமாகியுள்ளதால் தடுப்பூசி உற்பத்திக்கு தேவைப்படும் மூலப் பொருட்களின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், அமெரிக்கா இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. நிலைமை மோசமாக உள்ளதால் கூடுதலாக உள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகளையும் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்க வேண்டும் என அந்நாட்டு எம்பிகள் வலியுறுத்தினர்.

தடுப்பூசி கேட்கவில்லை
இந்நிலையில், இந்தியா தடுப்பூசிகள் பற்றி எவ்வித கோரிக்கையையும் முன் வைக்கவில்லை என அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஆக்சிஜன் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை மட்டும் அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்ததாகவும் அதை விரைவில் இந்தியாவுக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரெம்டெசிவிர்
அதேபோல இந்தியாவுக்கு தேவையான அளவில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களும் கிடைப்பதை உறுதி செய்ய அமெரிக்கா உதவி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நோயாளிகளின் உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்தின் காப்புரிமை தற்போது அமெரிக்காவின் கிலியட் சையன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. சுமார் 4.50 லட்சம் ரெம்டெசிவர் டோஸ்களை இந்தியாவுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி இல்லை
இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக பிரிவு செயலாளர் ஜென் சாகி கூறுகையில், "அமெரிக்காவிடம் இப்போது ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி ஒன்றுகூடக் கையிருப்பில் இல்லை. அதேநேரம் ஃபெடரல் மருந்து நிர்வாகம் தேவையான ஒப்புதலை வழங்கினால் சுமார் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்க முடியும்" என்று அவர் தெரிவித்தார். சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு என்ன தேவை என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் தடுப்பூசி பணிகள்
அமெரிக்காவில் தற்போது பைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இன்னும் அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே ஆக்ஸ்போர்டு தடுப்பூசி அமெரிக்காவிடம் இருந்தால், அதை இந்தியாவுக்கு அளித்து உதவ வேண்டும் என்று அந்நாட்டு எம்பிகள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இந்தியா சார்பில் தடுப்பூசி தேவை என அதிகாரப்பூர்வமாக எவ்வித கோரிக்கையும் வைக்கப்படவில்லை என அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு உதவுவோம்
இந்தியாவில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா தாமதமாக உதவுவதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். இது பற்றி ஊடக பிரிவு செயலாளர் ஜென் சாகி கூறுகையில், இந்த கொரோனா தொற்றைச் சமாளிக்க நாங்களும் பெரும் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும். இந்தியாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications