சுவிஸ் வங்கி பகிர்ந்த சீக்ரெட் தகவல்.. இந்தியர்கள் பதுக்கும் பணம் 3 மடங்கு உயர்ந்தது! தலையே சுத்துது
டெல்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள டெபாசிட் பணம் 2024-ல் மூன்று மடங்காக அதிகரித்து 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகளாக (சுமார் ரூ.37,600 கோடி) உயர்ந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கைகளில் இது தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகளவில் சுவிஸ் வங்கிகளுக்கு எப்போதும் தனித்துவம் இருக்கிறது. ஏனென்றால் சுவிஸ் வங்கிகள் எப்போதும் தனது வாடிக்கையாளர்களின் பெயர்களை யார் உடனும் பகிர்ந்து கொள்ளாது. இதனால் சர்வதேச அளவில் பலரும் சுவில் வங்கிகளில் முதலீடு செய்ய விரும்புவார்கள். இந்தியாவிலும் கூட அதுபோல பல கோடீஸ்வரர்கள் சுவிஸ் வங்கிகளில் பணத்தை வைத்துள்ளனர்.

சுவிஸ் வங்கிகள்
பொதுவாகவே நமது நாட்டில் சுவிஸ் வங்கிகள் வைத்திருக்கும் பணம் கறுப்புப் பணம் என்றே நினைப்பார்கள். கடந்த பல ஆண்டுகளாக இதை வைத்து நமது நாட்டில் அரசியல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி தனது வருடாந்திர ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் எவ்வளவு பணம் வைத்துள்ளனர் என்பது குறித்த டேட்டாவும் இடம்பெற்றிருக்கிறது.
மூன்று மடங்கு உயர்வு
அதில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள டெபாசிட் பணம் 2024-ல் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகளை இந்தியர்கள் (சுமார் ரூ.37,600 கோடி) டெபாசிட் செய்து வைத்துள்ளனர். அதேநேரம் நேரடியாக இந்திய வாடிக்கையாளர்கள், அதாவது தனி நபர்கள் பெயரில் உள்ள பணம் இந்திய மதிப்பில் ரூ.3675 கோடியாக மட்டுமே உள்ளது.
காரணம் என்ன!
கடந்த 2023ம் ஆண்டில் இந்தியத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யும் தொகை மிகக் கடுமையாகக் குறைந்து, 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகளாக சரிந்தது. இதன் காரணமாகவே இப்போது அது பல மடங்கு அதிகரித்தது போலத் தோற்றமளிக்கிறது. இதற்கு முன்பு கடந்த 2021ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்த தொகை 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகளாக இருந்தது. அதன் பிறகு மீண்டும் கிட்டதட்ட அதே நிலையை அடைந்துள்ளது.
அதேநேரம் இவை அங்குள்ள உள்ளூர் வங்கிகள் சுவிஸ் தேசிய வங்கிக்கு அளித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஆகும். இதில் இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் போலி நிறுவனங்கள் அல்லது ஷேல் கார்பரேஷன் மூலம் வைத்திருக்கும் பணம் கணக்கில் வராது. அதேநேரம் இந்த ஒட்டுமொத்த தொகையையும் கறுப்புப் பணமாகக் கருத முடியாது என்றும் சுவிஸ் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியா சுவிட்சர்லாந்து ஒப்பந்தம்
சுவிட்சர்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே வரி விஷயங்களில் தகவல் பரிமாற்றம் ஒப்பந்தம் 2018 முதல் அமலில் உள்ளது. இந்த கட்டமைப்பின் கீழ், 2018 முதல் சுவிஸ் நிதி நிறுவனங்களில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து இந்தியக் குடியிருப்பாளர்கள் பற்றிய விரிவான நிதி தகவல்களும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்படுகிறது.
இது தவிர, நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இந்தியர்களின் கணக்குகள் குறித்த விவரங்களையும் இந்திய அதிகாரிகள் கேட்டுப் பெறலாம். சம்பந்தப்பட்ட நபர் முறைகேடு செய்ததற்கான ஆதாரத்தை இந்திய அதிகாரிகள் சமர்ப்பித்தால் அந்த நபர் குறித்த தகவல்களை சுவிட்சர்லாந்து அளிக்கும். இதுவரை 100+ பேரின் தகவல்களை இந்தியா இதுபோல கேட்டுப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications