ரூ.2.5 லட்சம் கோடி செலவழிச்சு என்ன பண்றது? ரயிலின் வேகமும், நேரமும் சரில்லையே - சி.ஏ.ஜி அறிக்கை
டெல்லி: இந்திய ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்புக்காக ரூ.2.5 லட்சம் செலவு செய்தும் அதன் வேகமும், துள்ளிய நேரமும் சரியாகவில்லை என இந்திய கணக்கு தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ. அறிக்கையில், இந்திய ரயில்வே அதன் இயக்கத்தை மேம்படுத்த தவறிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஃப்டார் திட்டத்தின்படி, 2021-22 நிதியாண்டின் முடிவில் இந்திய ரயில்வே அதன் பயணிகள் ரயில்களின் சராசரி வேகத்தை மணிக்கு 50 கி.மீ.-இல் இருந்து 75 கி.மீ. ஆகவும், சரக்கு ரயில்களின் வேகத்தை மணிக்கு 25 கி.மீ-இல் இருந்து 50 கி.மீ ஆக உயர்த்தப்படும் என கருதப்பட்டது.

சராசரியை விட குறைந்த வேகம்
ஆனால், பயணிகள் ரயில்களின் வேகம் பழைய நிலையிலேயே தொடர்வதாகவும், சரக்கு ரயில்களின் வேகம் சராசரிக்கும் குறைவாக 23.6 கி.மீ. ஆக இருப்பதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது. அதாவது 2019-20 நிதியாண்டில் இந்தியாவில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சராசரி வேகம் 50.6 கி.மீ ஆகவும் சரக்கு ரயில்களின் வேகம் 23.6 கி.மீ ஆகவும் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அதிக ரயில்களால் இந்த பிரச்சனை
இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், "பயணிகள் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே வேகம் குறைந்ததற்கு காரணம். ஆண்டுக்கு சராசரியாக 200 புதிய பயணிகள் ரயில் சேவைகளை இந்திய ரயில்வே தொடங்கி வருகிறது." என்று குறிப்பிட்டுள்ளது. சி.ஏ.ஜி. 2,951 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை கணக்கிட்டு இந்த அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

சராசரி வேகம் எவ்வளவு?
அதன்படி 2.1% ரயில்கள் மட்டுமே மணிக்கு 75 கி.மீ வேகத்தில் செல்வதாகவும், 37 சதவீதம் ரயில்கள் மணிக்கு 55 - 75 கி.மீ. வேகத்தில் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31% ரயில்கள் மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்திலும், 9.4.% ரயில்கள் மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கும் குறைவாக செல்வதாக சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது. பயணிகள் ரயில்களின் வேகம் சற்று அதிகரித்தாலும், சரக்கு ரயில்களின் வேகம் குறைந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள் கட்டணம் உயரும் அபாயம்
பயணிகள் ரயில்களில் அளிக்கப்படும் கட்டண சலுகை சரக்கு ரயில்கள் மூலமாக கிடைக்கும் வருவாயை கொண்டே சரிகட்டப்படுகிறது. ஆனால், சரக்கு ரயில்களின் வேகம் குறைவு காரணமாக சாலைவழி சரக்கு போக்குவரத்தை பலர் நாடுகின்றனர். இதனால் ரயில்வேக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறைந்து பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படும்.

நேரம் தவறுவதும் அதிகரிப்பு
வேகம் மட்டுமின்றி நேரம் தவறி பல ரயில்கள் பயணிப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட நேரத்தில் 15 நிமிடத்திற்குள் ரயில் நிலையத்துக்கு ரயில் சென்றதடைந்தால் அது சரியான நேரமாக கருதப்படுகிறது. ஆனால், சராசரியாக 69.23 % ரயில்கள் மட்டுமே நேரத்துக்கு செல்வதாக சி.ஏ.ஜி. தெரிவிக்கிறது. 2013-14 நிதியாண்டில் இந்த சராசரி 82.6% ஆக இருந்தது. அது படிப்படியாக குறைந்து 69.23 % ஆக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்புக்காக ரூ.2.5 லட்சம் செலவு செய்தும் அதன் வேகமும், துள்ளிய நேரமும் சீராகவில்லை என இந்திய கணக்கு தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications