ஒரு வார்த்தை கேட்ருக்கலாம்ல..நாளை முதல் உயரும் ரயில் கட்டணம்! முன்பதிவு செய்தவர்களுக்கு பிரச்சனையா?
டெல்லி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் ரயில் கட்டணத்தை அதிகரித்துள்ளது. நாளை (டிசம்பர் 26) முதல் நாடு முழுவதும் ரயில்வே கட்டணத்தில் மாற்றம் அமலுக்கு வர உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி உருவாகியுள்ளது. ஏற்கனவே அன்றாடச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், ரயில் பயண கட்டண உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என்றும், முடிந்த அளவு ரயில்வே கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய சேவை நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ள நிலையில், பல லட்சம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். ஆனாலும், ஊழியர்களின் சம்பளச் செலவு தற்போது ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேபோல் ஓய்வூதியச் செலவும் 60 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால் 2024-25 நிதியாண்டில் மொத்த ரயில்வேச் செலவு இரண்டு லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தப் பெரிய செலவுகளைச் சமாளிக்கவே பயணக் கட்டணத்தில் சிறிய அளவிலான திருத்தம் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே
ஆனால், இது சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ரயில்வே அறிவிப்பில் குறிப்பிடப்பட்டதாவது, 215 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பயணிகளுக்கு எந்த உயர்வும் இல்லை. அதேபோல் புறநகர் மின்சார ரயில்களின் கட்டணங்கள் மாற்றமின்றி தொடரும். ஆனால் நடுத்தர மற்றும் நீண்ட தூரப் பயணங்களில் சிறிய அளவிலான உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளிலும், ஏசி பெட்டிகளிலும் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் கட்டண உயர்வு
உதாரணமாக 500 கிலோமீட்டர் பயணம் செய்தால், முன்பு இருந்த கட்டணத்தை விட 10 ரூபாய் கூடுதல் செலுத்த வேண்டியிருக்கும். இதை அடிக்கடி பயணம் செய்பவர்கள் அதிகச் செலவாகவே பார்க்கின்றனர். முன்பதிவில்லாத பெட்டிகளில் 215 கிலோமீட்டரைத் தாண்டிய பிறகு, ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் நாள் கூலி தொழிலாளர்கள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் போன்றோருக்கு இது சிரமமாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது.
ரயில்வே கட்டண மாற்றம்
தூர அடிப்படையில் கட்டண உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. 216 முதல் 750 கிலோமீட்டர் வரை பயணம் செய்தால் கூடுதலாக ரூ.5, 751 முதல் 1,250 கிலோமீட்டர் வரை ரூ.10, 1,251 முதல் 1,750 கிலோமீட்டர் வரை ரூ.15, 1,751 கிலோமீட்டரைத் தாண்டினால் ரூ.20 கூடுதல் செலுத்த வேண்டியுள்ளது. தொகை சிறியதாக இருந்தாலும், குடும்பமாக அல்லது அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு இது கணிசமான செலவாக மாறும் என பயணிகள் கூறுகின்றனர்.
பொதுமக்கள் அதிருப்தி
ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது. ஆனாலும், நாளை முதல் அமலாகும் இந்த புதிய கட்டண கட்டமைப்பு, ரயில்வே நிதிசுமையை குறைக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாக அரசு கூறுகிறது. பொதுமக்கள் தரப்பில் இதற்கெதிராக அதிருப்தி நிலவி வருகிறது. பல பயணிகள், எதிர்காலத்தில் இத்தகைய முடிவுகளை எடுக்கும் முன் மக்களின் கருத்துகளையும், அவர்களின் பொருளாதார நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications