அக்னிபாத் போராட்டம்.. இந்திய ரயில்வே-க்கு மட்டும் ரூ.259.44 கோடி இழப்பாம்! ரயில்வே அமைச்சர் தகவல்
டெல்லி: அக்னிபாத் போராட்டம் காரணமாக ரயில்வே துறைக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்த தகவல்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மத்திய அரசு அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்து இருந்தது. ராணுவ ஆட்சேர்பு திட்டமான இதன் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.
அதன் பின்னர் அவர்களில் 25 % பேர் மட்டுமே ராணுவத்தில் தொடர முடியும். 75% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஓய்வூதியம் எதுவும் கிடைக்காது

அக்னிபாத் போராட்டம்
ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கும் செலவுகளைக் குறைக்கும் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்பட்டது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் வடமாநிலங்களில் பெரும் போராட்டம் நடைபெற்றது. பீகார் மாநிலத்தில் முதலில் தொடங்கிய இந்தப் போராட்டம் பின்னர், பல மாநிலங்களிலும் நடந்தது. தமிழ்நாட்டிலும் கூட இந்தப் போராட்டம் நடைபெற்றது. இருப்பினும், இந்தத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை.

போராட்டம்
அதேபோல பீகார், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தின் போது, ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் ரயில்வே துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனிடையே அக்னிபாத் போராட்டத்தில் ரயில்வே துறைக்கு 259.44 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜ்ய சபாவில் தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் விளக்கம்
காங்கிரஸின் அகிலேஷ் பிரசாத் சிங் எழுப்பிய கேள்விக்கு அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், "அக்னிபாத் போராட்டங்கள் காரணமாக ரயில் சேவைகள் தடைப்படும் போது, பயணிகளுக்குத் திருப்பியளிக்கப்பட்ட தொகை குறித்த டேட்டா மத்திய அரசிடம் இல்லை. இருப்பினும், ஜூன் 14, 2022 முதல் ஜூன் 30, 2022 வரையிலான காலகட்டத்தில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சுமார் ரூ.102.96 கோடி பயணிகளுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது.

259.44 கோடி ரூபாய் நஷ்டம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் கீழ் போலீசாரும் சட்ட ஒழுங்கும் மாநிலப் பட்டியலின் கீழ் வரும். எனவே, குற்றங்களைத் தடுத்து ரயில்வே-இல் சட்டம் ஒழுங்கைப் பேணுவது மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும். அக்னிபாத் போராட்டத்தில் பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. அதில் மட்டும் ரயில்வே துறைக்கு 259.44 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.

ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் இப்போது மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 21ஆம் தேதி கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் நாளான இன்றும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரண்டும் இன்று நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications