தங்க மார்கெட் அதிர போகுது.. இதுவரை இல்லாத வகையில் 90ஐ தாண்டி சரிந்த ரூபாய் மதிப்பு.. நிலைமை மோசம்!
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இப்போது முதல்முறையாக அது ரூ.90 மார்க்கை தாண்டியுள்ளது. இந்த வாரம் தொடக்கம் முதலே இந்தியா ரூபாய் கடுமையாகச் சரிந்து வருகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாகச் சரிந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை ரூபாயின் மதிப்பு 4%க்கும் மேல் சரிந்துள்ளது. குறிப்பாகக் கடந்த நவம்பரில் மட்டும் 0.8% வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளது.

வரலாறு காணாத சரிவு
இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முதல்முறையாக ரூ.90ஐ கடந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.89.92 வரை சென்றது. இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடனேயே டாலர் மதிப்பு 90ஐ கடந்து சென்றது. காலை 10 மணியளவில் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ.90.14ஆக இருக்கிறது.
காரணம் என்ன!
இதற்கு இரு முக்கியக் காரணங்களை வல்லுநர்கள் சொல்கிறார்கள். ஒன்று அமெரிக்கா இந்தியா வர்த்தக ஒப்பந்தம்.. இந்த ஒப்பந்தம் கடந்த நவம்பர் மாதமே கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், எதிர்பாராத சில காரணங்களால் இது தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா தான் பிரதான மார்கெட்டாக இருக்கும் சூழலில், இதனால் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது முதல் காரணம்.
அதேபோல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை எடுத்துச் செல்வதும் ஒரு முக்கிய காரணமாகும். பொதுவாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யும்போது, நமது அந்நிய செலாவணி அதிகரிக்கும். அதேநேரம் இப்போது உலகின் மற்ற நாடுகளை விட இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுக்கிறார்கள். இதனால் அந்நிய செலாவணி குறைகிறது. இதுவும் ரூபாய் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இன்னும் சரியலாம்
இது தொடர்பாக ஃபின்ரெக்ஸ் டிரெஷரி அட்வைசர்ஸ் தலைவர் அனில் பன்சாலி கூறுகையில், "இந்தியா அமெரிக்கா வர்த்தகப் பாதிப்பும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்பதும் தான் இதற்குப் பிரதானக் காரணம். ரிசர்வ் வங்கி தலையிடுவதாலேயே ரூபாய் மதிப்பு இந்தளவுக்கு இருக்கிறது. ரிசர்வ் வங்கி தலையிடவில்லை என்றால் இது 91 ரூபாய் வரை சந்தித்திருக்கும்" என்றார்.
அடுத்து என்ன
அதேபோல ரிசர்வ் வங்கியின் மானிட்டரி பாலிசி குழு கூட்டம் இன்று டிசம்பர் 3ம் தேதி தொடங்கியது.. வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 5ம் தேதி அறிவிக்கப்படும். அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை டிசம்பர் 10ம் தேதி அறிவிக்கும் நிலையில், அதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கி கூட்டம் நடக்கிறது. ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி குறைக்கப்படும் எனச் சிலர் எதிர்பார்க்கும் நிலையில், அப்படி வட்டி குறைக்கப்பட்டால் ரூபாய் மதிப்பு மேலும் சரியும்.
தங்க மார்கெட்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரியும்போது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரலாம்.. அதாவது டாலர் மதிப்பில் அந்த பொருட்களின் விலை உயரவில்லை என்றாலும் ரூபாய் சரிவால் ரூபாய் மதிப்பில் அதன் விலை உயரும். இதனால் நாம் இறக்குமதிக்கு அதிக ரூபாயை செலவிட வேண்டி இருக்கும். இந்தியா தனது கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதியையே முழுமையாகச் சார்ந்திருக்கும் நிலையில், இதனால் அந்தப் பொருட்களின் விலையும் உயரும் சூழல் உருவாகலாம்!












Click it and Unblock the Notifications