சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா?.. தகவல் வெளியானது
Recommended Video
டெல்லி: சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ.6,757 கோடி என அந்த நாட்டு மத்திய வங்கி தகவல் வெளியிட்டு உள்ளது.
கருப்பு பணம் பற்றி சுவிட்சர்லாந்தில் இருந்து பெறப்படும் தகவல்கள் ரகசிய விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விசாரணையின் அடிப்படையில் ஒவ்வொரு கருப்பு பண விவகாரம் பற்றிய தகவல்களையும் இந்தியா-சுவிட்சர்லாந்து அரசுகள் பகிர்ந்து வருகின்றன. வரி விவகாரங்களில் இருநாடுகளும் பரஸ்பரம் உதவி புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தகளில் கையெழுத்திட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 25 இந்தியர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைத்திருப்பதாக கிருஷ்ணபகவான் ராம்சந்த், கல்பேஷ் ஹர்ஷத் கினரிவாலா உள்ளிட்ட இந்தியர்களின் பெயர்கள் ஏற்கனவே கசிந்துள்ளது
இதற்கிடையில், வெளிநாட்டினர் தங்கள் நாட்டு வங்கிகளில் சேமித்து வரும் பணம் குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து மத்திய வங்கி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருந்த வெளிநாட்டினரின் மொத்த தொகை குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 2018-ம் ஆண்டில் அந்த நாட்டு வங்கிகளில் இருந்த இந்தியர்களின் மொத்த சேமிப்பு தொகையின் மதிப்பு 955 மில்லியன் சுவிஸ் பிராங் (சுமார் ரூ.6,757 கோடி) ஆகும். இது முந்தைய ஆண்டைவிட 6 சதவீதம் குறைந்து உள்ளது.
இதைப்போல சுவிட்சர்லாந்து வங்கிகளில் சேமிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தானியர்களின் பணமும் 3-ல் ஒரு பங்கு குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பணமாக 744 மில்லியன் சுவிஸ் பிராங் (சுமார் ரூ.5,300 கோடி) மட்டுமே கடந்த ஆண்டில் இருந்தது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications