ஜெர்மனியிலிருந்து வரும் ராட்சசன்! ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்! மோடி மெகா திட்டம்
டெல்லி: இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை தீவிரமாக விரிவாக்கி வரும் நிலையில், இந்திய கடற்படையை பலப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க புராஜெக்ட் 75 திட்டத்தை இந்தியா கையில் எடுத்துள்ளது.
மத்திய அரசின் மிக முக்கியமான இந்த திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஜெர்மனியில் இருந்து நீர்மூழ்கிக் கப்பலை வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக இந்த ஒப்பந்தம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

சுமார் ₹70,000 கோடி மதிப்பிலான இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கீழ், ஆறு நவீன டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்நாட்டிலேயே முழுமையாகக் கட்டப்பட உள்ளன.
மும்பையில் உருவாகும் நீர்மூழ்கிகள்
இத்திட்டத்தின் கீழ் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்காக, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான மும்பையின் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் மற்றும் ஜெர்மனியின் பிரபல திக்சன்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ் நிறுவனம் இணைந்து பணியாற்றுகின்றன. வணிக நிபந்தனைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான விவாதங்களால் ஏற்பட்ட நீண்டகாலத் தாமதத்திற்குப் பிறகு, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
ஜெர்மன் நிறுவனமான TKMS, இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு முன்பே இந்திய நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்கும் பணிகளை தொடங்கிவிட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த வி.இ.எம் டெக்னாலஜிஸ் (நிறுவனத்துடன் இணைந்து நவீன டார்பிடோக்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தையும், மும்பையைச் சேர்ந்த சி.எஃப்.எஃப் ஃப்ளூயிட் கண்ட்ரோல் நிறுவனத்துடன் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கருவிகளுக்கான கூட்டு ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் DRDO நிறுவனத்துடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.
கடலுக்குள் மறையும் வித்தை
சாதாரண டீசல் நீர்மூழ்கிக் கப்பல்கள் தங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கும் கடலின் மேற்பரப்பிற்கு வர வேண்டும். அப்படி மேலே வரும்போது எதிரிகளின் ரேடாரில் எளிதில் சிக்கிவிடும் அபாயம் உள்ளது.
ஆனால், புராஜெக்ட் 75 கப்பல்களில் 'ஏர்-இண்டிபென்டன்ட் புரொபல்ஷன்' எனும் அதிநவீன காற்று சாரா தொழில்நுட்பம் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம், இந்தக் கப்பல்கள் கடலின் மேற்பரப்பிற்கு வராமல் தொடர்ச்சியாகப் பல வாரங்கள் ஆழ்கடலில் மறைந்திருந்து ரோந்துப் பணிகளை மேற்கொள்ள முடியும். அத்துடன் அதிநவீன சென்சார்கள், தொலைதூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ரேடாரை ஏமாற்றும் எலக்ட்ரானிக் போர் அமைப்புகளும் இதில் இடம்பிடிக்கின்றன.
இந்தியாவிற்கான உண்மையான நோக்கம் என்ன?
வெறுமனே வெளிநாட்டிலிருந்து ஆயுதங்களை வாங்குவது இந்தியாவின் நோக்கமல்ல.. இந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பெற்று, எதிர்காலத்தில் இந்தியாவிலேயே சுயமாக புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைத்து உருவாக்கும் பலத்தைப் பெறுவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும். உதிரிபாகங்களை இணைப்பதுடன் நிற்காமல், உள்நாட்டுப் பொறியாளர்கள் மற்றும் கப்பல் கட்டும் தளங்கள் இதன் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் பாதுகாப்பு அமைச்சகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்திய கடற்படையிடம் தற்போது போதிய எண்ணிக்கையிலான பாரம்பரிய நீர்மூழ்கிக் கப்பல்கள் இல்லை என்ற சூழல் நிலவுகிறது. ஏற்கனவே பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் 6 கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டு, கடைசி கப்பலான ஐ.என்.எஸ் வாக்ஷீர் ஜனவரி 2025-ல் கடற்படையில் இணைக்கப்பட்டது.
இருப்பினும், 1980-களில் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்ட 'ஷிஷுமார் ரக' நீர்மூழ்கிக் கப்பல்கள் பழமையாகிவிட்டதாலும், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாலும், இந்த 6 புதிய கப்பல்கள் கடற்படையின் பாதுகாப்பை அசைக்க முடியாத பலத்திற்கு உயர்த்தும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், உற்பத்தி தொடங்கும்.


Click it and Unblock the Notifications
