தீவிரமடையும் போராட்டம்! விவசாயிகள் ஒன்று கூடுவதை தவிர்க்க.. இன்டெர்நெட் இணைப்பு துண்டிப்பு!
டெல்லி: தங்களது நீண்ட ஆண்டு கோரிக்கைகளை வைத்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், அவர்கள் முகாமிட்டிருக்கும் ஹரியான எல்லை பகுதியில் இன்டர்நெட் இணைப்பை அம்மாநில அரசு துண்டித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்து வந்து, போராட்டத்தை தொடங்கினர். தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றுக்கொண்டது. இந்நிலையில், இதேபோன்ற போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லி நோக்கி அவர்கள் அணி வகுக்க தொடங்கியுள்ளனர்.

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், மற்றும் 2020-21ல் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த போராட்டங்கள் தங்களின் வாக்கு வங்கிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசு உணர்ந்திருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கிறது. மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு இந்த பேச்சுவார்ததையை நடத்தி வருகிறது. இதுவரை 4 சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், 5ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
ஆனால், தொடர் பேச்சுவார்த்தை மூலம் மத்திய அரசு காலத்தை வீணடிப்பதாக விவசா சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. நாடாளுமன்றத்தின் அவையை உடனே கூட்டி, அதில் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல தங்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் ஹரியான போலீஸ் கடுமையான தாக்குதலை நடத்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சதர் அம்பாலா, பஞ்சோகேரா மற்றும் நாகல் உள்ளிட்ட பகுதிகளில் நாளையும் நாளை மறுநாளும் (பிப்.28, 29) இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற பல்வேறு சோஷியல் மீடியா தளம் மூலமாக தவறான தகவல்கள் பரவும் என்பதால் இன்டெர்நெட் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே குருக்ஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா பகுதிகளில் இன்டெர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications