அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்!
டெல்லி: ஈரான்-அமெரிக்கா இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வர இருக்கிறது. எனவே ஈரான் மீது அடுத்தக்கட்ட தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறதா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இதற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ விளக்கமளித்துள்ளார்.
ரூபியோ 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார். இன்று, இந்தியா டூடே செய்தி ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்காவின் பிளான்
அவர் பேசியதாவது, “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முக்கிய இலக்கு மிகத் தெளிவானது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறக் கூடாது என்பதில் அதிபர் உறுதியாக உள்ளார். இதற்காக அமெரிக்கா எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறது. அமெரிக்காவின் முதல் விருப்பம் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுதான். இதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அமெரிக்கா பயன்படுத்தும்.
அடுத்து என்ன?
அதே நேரத்தில், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு புதிய ராணுவத் தாக்குதலை நடத்த அதிபர் ட்ரம்ப் தயங்க மாட்டார். அதற்கான அனைத்து ராணுவ விருப்பங்களும் மேசையின் மீது தயாராகவே உள்ளன” என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், ரூபியோ இதனை தெரிவித்திருக்கிறார்.
போர் நிறுத்தம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிராக நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு உலகளாவிய எரிசக்தி சந்தை பெரும் பாதிப்பைச் சந்தித்தது.
தற்போதைய சூழலில், உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து அமெரிக்காவும் ஈரானும் ஒரு சுமூகமான ஒப்பந்தத்தை பெரிய அளவில் விவாதித்து இறுதி கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளதை ரூபியோ கூறியிருக்கிறார்.
ஈரான்தான் காரணம்
மட்டுமல்லாது, தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்தம் மற்றும் அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்கு அமெரிக்காவோ அல்லது அதன் வளைகுடா நட்பு நாடுகளோ காரணம் அல்ல. அந்தப் பழி 100 சதவீதம் ஈரானையே சாரும் என்று ரூபியோ எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications