உச்சத்தில் வளைகுடா பதற்றம்.. சட்டென இந்தியாவுக்கு வரும் ஈரான் அதிபர்.. பிரதமர் மோடியுடன் ஆலோசனை
டெல்லி: அமெரிக்காவுடனான மோதல் மற்றும் மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார். செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ள 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளதாக ஈரான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. அமெரிக்கா ஈரான் இடையே நேரடியான தாக்குதல்கள் இல்லை என்றாலும் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதற்கிடையே ஈரான் அதிபர் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா வருகை
அடுத்த மாதம் பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும் நிலையில், அதில் கலந்து கொள்ளவே ஈரான் அதிபர் பெசெஷ்கியான் இந்தியா வரவுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் அமெரிக்க மோதல் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், அதன் பிறகு ஈரான் அதிபர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். பயணத்தின் இறுதி விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின்போது இந்தியா-ஈரான் உறவுகள், சபஹார் துறைமுகத்தின் எதிர்காலம் மற்றும் மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.
சபஹார் துறைமுகம்
இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சபஹார் துறைமுக விவகாரம் இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளுடன் இந்தியாவின் வர்த்தக தொடர்பை வலுப்படுத்துவதில் சபஹார் துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது பாகிஸ்தான் உடன் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் ஒரு வாய்ப்பை சபஹார் துறைமுகம் ஏற்படுத்தி தருகிறது.
மேலும், ஹார்முஸ் ஜஸசந்தி இந்திய கடற்படையினர் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்தும் இரு நாட்டு அதிபர்களும் விவாதிக்க வாய்ப்புள்ளது. தற்போது 165க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் ஹார்முஸ் மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய மோதலின் போது 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அழைப்பு
முன்னதாக கடந்த ஜூன் மாதம் இரு தலைவர்களும் தொலைப்பேசியில் பேசியபோது, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ஈரான் அதிபர் பெசெஷ்கியானுக்கு பிரதமர் மோடி அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்திருந்தார். அப்போது மேற்கு ஆசியாவின் நிலவரம் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் முக்கியமானது என்பதை மோடி வலியுறுத்தியிருந்தார்.
பெசெஷ்கியான் மற்றும் மோடி ஏற்கனவே 2024 அக்டோபரில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சூழலில் தான் இரு தலைவர்களும் மீண்டும் அடுத்த மாதம் சந்தித்து பேசவுள்ளனர்.
ஈரான்
ஈரான் 2024 ஜனவரி முதல் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக உள்ளது. எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து ஈரானும் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்தது. முன்னதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்திருந்தார். பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், மேற்கு ஆசியாவில் பதற்றத்தை தணிப்பதில் இந்தியா இன்னும் தீவிரமாக பங்காற்ற முடியும் என்று கூறியிருந்தார்.
சமீபத்தில் வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகவும் இந்தியா தனது கவலையை ஈரானிடம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்திய மாலுமிகள் இருக்கும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், இந்திய மாலுமிகள் இருக்கும் கப்பல்கள் தாக்கப்படுவது தொடர்ந்தே வருகிறது.


Click it and Unblock the Notifications
