முடங்கியது IRCTC வெப்சைட்.. டிக்கெட் புக் செய்ய முடியாமல் தவிக்கும் ரயில் பயணிகள்! என்ன செய்வது?
டெல்லி: ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மற்றும் செல்போன் ஆப் திடீரென முடங்கியுள்ளதால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர். இதையடுத்து மாற்று யோசனையை வழங்கியுள்ளது ஐஆர்சிடிசி.
நாட்டின் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்து நிறுவனமாக இந்திய ரயில்வே திகழ்கிறது. இந்தியாவில் ரயில்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) என்பதன் சுருக்கமே IRCTC.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலமாக நாடு முழுவதும் தினசரி பல லட்சம் பேர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். தினசரி புக் ஆகும் சுமார் 14 லட்சம் ரயில் டிக்கெட்களில் 80% ஐஆர்சிடிசி தளம் மூலமாக புக் செய்யப்படுபவை ஆகும். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய நுழைவதால் பல நேரங்களில் ஐஆர்சிடிசி இணையதளம் திக்குமுக்காடும்.
இதனால் பல சமயங்களில் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க படிப்படியாக ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று திடீரென IRCTC இணையதளம் முடங்கியது பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செல்போன் செயலி முடங்கியுள்ளதாக IRCTC தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் இந்த பிரச்சனையை தீர்த்து வருவதாகவும், விரைவில் சரிசெய்யப்படும் என்றும் IRCTC தெரிவித்துள்ளது.
மேலும், தொழில்நுட்ப காரணங்களால், IRCTC இணையதளம் மற்றும் செல்போன் ஆப்பில் டிக்கெட் சேவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதற்கு மாற்றாக அமேசான், மேக் மை ட்ரிப் போன்ற பிற B2C தளங்கள் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு IRCTC கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications