கரப்பான்பூச்சி கட்சியின் போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி உதவி? வெளியுறவுத்துறை தந்த விளக்கம்
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி உதவிகள் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் அதுபற்றிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளது.

'நீட்' வினாத்தாள் கசிவு மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி நடந்து வருகிறது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி போராட்டம் வெடித்துள்ளது.
குறிப்பாக ஜந்தர் மந்தரில் நாளுக்கு நாள் போராட்டம் வீரியமாகி வருகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர் அமைப்பினர் குவிந்து வருகின்றனர். இது மத்திய அரசுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.
இதற்கிடையே தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாடுகளின் சக்தி உள்ளது. அவர்கள் தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை தூண்டிவிட்டு மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்க வைத்துள்ளனர் என்ற குற்றசசாட்டுகள் உள்ளன. அதுமட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை வைத்து தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இந்த போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுபற்றி மத்திய அரசு சார்பில் முதல் முறையாக வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி உதவி செய்யப்படுகிறதா? என்ற கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ''அதுதொடர்பாக பகிர்ந்து கொள்ளும் படியான தகவல்கள் எதுவும் இல்லை'' என்று கூறியுள்ளார்.
ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் 6 ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் தற்போது 50 நாட்களை தொட்டுள்ளது. முதலில் இந்த போராட்டம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. ஆனால் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கி ஜூன் 28 ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அதன்பிறகு தான் இந்த போராட்டம் அதிக கவனம் பெற்றது.
தற்போது சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துவிட்டார். 26 நாள் தொடர் உண்ணாவிரதத்தை அவர் கடந்த 23ம் தேதி முடித்தார். மத்திய அமைச்சர் ஜேபி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரின் சமாதானத்தை ஏற்று அவர் உண்ணாவிரதத்தை முடித்த நிலையில் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கூறியுள்ளனர்.
ஆனால் மத்திய அரசோ, தர்மேந்திர பிரதானை விடுவிக்க மறுத்து வருகிறது. இதனால் இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக, இன்று மாலையில் மத்திய அரசு - கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இடையே 3வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த பேச்சுவார்த்தை அதிக கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
