மத்திய அரசு கொண்டு வரும் சட்ட மசோதா: "பேரழிவாக இருக்கும்.." ஏன் தெரியுமா? எச்சரிக்கும் கபில் சிபல்
டெல்லி: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ள மூன்று மசோதாக்களும் பேரழிவை உருவாக்கும் என்று ராஜ்யசபா எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் குற்ற செயல்களுக்கு தண்டனை கொடுக்க இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி) அமலில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1860-ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல், 1898-ம் ஆண்டு, குற்றவியல் நடைமுறை சட்டமும் ( Crpc), 1872-ம் ஆண்டு இந்திய சாட்சியங்கள் (Indian Evidence Act) சட்டமும் கொண்டுவரப்பட்டன. இந்தியாவில் குற்றச்செயல்களுக்கு இந்த சட்டங்களில்தான் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

இந்நிலையில் தான் இந்த 3 சட்டங்களை மறுசீரமைத்து, புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டுவர மத்திய அரசு மசோதா கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்திய தண்டனை சட்டத்திற்கு பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா மசோதா-2023, Crpc எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு பதிலாக பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா-2023, இந்திய சாட்சி யங்கள் சட்டத்துக்கு பதிலாக பாரதீய சாக்ஷ்யா மசோதா-2023 ஆகிய மசோதாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 3 மசோதாக்களையும் லோக்சபாவில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அமித்ஷா லோக்சபாவில் மசோதாவை தாக்கல் செய்து பேசும் போது, புதிய மசோதாக்களில் தேச தூரோக குற்றம் நீக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலாக பிரிவினை செயல்கள், ஆயுத புரட்சி, நாசவேலைகள், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட புதிய குற்றச்செயல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மகளிருக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சமூக பிரச்சினைகள் போன்றவற்றுக்கு பாரதீய நியாய சன்ஹிதா மசோதாவில் தீர்வு காணப்பட்டுள்ளது. கும்பலாக சேர்ந்து கொலை செய்தல், சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படும். கூட்டு வன்கொடுமைக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.
காவல்துறை அதிகாரி, அரசு ஊழியர் மற்றும் ஆயுதப்படை காவலர் என உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும். அது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது" என்று பேசினார். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டத்தின் நோக்கம் தண்டிப்பதாகத்தான் உள்ளது, நீதி வழங்குவதாக இல்லை என்றும் தங்கள் ஆட்சியை எதிர்ப்ப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சட்டங்களை உருவாக்கியுள்ளதாக அமித்ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்யும் பேசியிருந்தார்.
இந்த நிலையில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ள மூன்று மசோதாக்களும் பேரழிவை உருவாக்கும் என்று ராஜ்யசபா எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- அரசியல் காரணங்களுக்காக போலீஸ் படையை தவறாக பயன்படுத்துவதுதான் நமது நாட்டின் பிரச்சினையாகும்.
பாஜக எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன . போலீஸ் படைகள் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் உத்தரவை கேட்டுதான் நடக்கின்றன. இந்த அடிப்படையில் பார்க்கும் போது, போலீஸ் அல்லது அமலாக்க முகமைகளுக்கு 60-90 நாட்கள் காவலில் வைக்க அதிகாரம் கொடுப்பது பேரழிவிற்கான செயல்முறையாகும்.
தேசத்துரோக சட்டம் மற்றப்பட்டதும் எந்த சூழலில் ஒரு நபரை விசாரிக்கலாம் என்று வரையறுக்காமல் தேசிய பாதுகாப்பு தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளது. ஒருபக்கம் காவல்துறைக்கு அதிக அதிகாரம் வழங்குகிறார்கள். மற்றொரு பக்கம் மக்களின் குரலை ஒடுக்குகிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு கபில் சிபில் கூறினார்.












Click it and Unblock the Notifications