பல் வலிக்கு யூடியூப் மருத்துவம்! துடிதுடித்து உயிரிழந்த 26 வயது இளைஞன்! வேண்டாம் இந்த விபரீதம்
டெல்லி: பல் வலிக்கு மருத்துவமனைக்குச் செல்லாமல் யூடியூப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொண்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் இப்போது மிகவும் பவர்புல்லான ஒன்றாக மாறி வருகிறது. திறமை மட்டும் இருந்தால் ஏதோ ஒரு மூளையில் எந்தவொரு வசதி வாய்ப்பும் இல்லாத நபரும் கூட சமூக வலைத்தளம் மூலம் புகழ்பெற்ற நபராக மாறிவிட முடியும்.
அதேநேரம் இந்த சமூக வலைத்தளங்களை நாம் தவறாகப் பயன்படுத்தினால் பேரழிவும் நிச்சயம் ஏற்படும். இது கிட்டதட்ட இரண்டு பக்கமும் கூர்மையான முனைகளைக் கொண்ட ஒரு கத்தியைப் போன்றதுதான்.

பல் வலி: அப்படி சமூக வலைத்தளத்தைத் தவறாகப் பயன்படுத்திய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது. ஜாராக்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அஜய் மஹ்தோ... இவருக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான பல் வலி ஏற்பட்டுள்ளது. பல் வலி தொடர்ந்து அதிகரித்த நிலையில், அதன் சிகிச்சைக்கு மருத்துவமனைக்குச் செல்லாமல் யூடியூப் பக்கம் போய் இருக்கிறார் இந்த இளைஞர்.
அந்த வீடியோக்களில் பல் வலி அதிகமாக இருந்தால் அரளி (oleander) விதைகளைச் சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதை அப்படியே நம்பிய மஹ்தோ, அந்த யூடியூப் வீடியோக்களில் இருந்து வைத்திய முறையை அப்படியே பின்பற்றியுள்ளார். பல் வலி தீவிரமாக இருக்கவே, அதிகப்படியான அரளி விதையைச் சாப்பிட்டால் வலி சீக்கிரம் சரியாகும் என நினைத்து அவர் அதிகளவில் அரளியைச் சாப்பிட்டுள்ளார்.
உயிரிழப்பு: இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் பின்னர் ஹசாரிபாக்கில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தனது மகன் பல்வலிக்கு யூடியூப் வீடியோக்களைப் பார்த்து அரளி விதைகளை உட்கொண்டதாக உயிரிழந்த இளைஞரின் தந்தை நுனுசந்த் மஹ்தோ கண்ணீருடன் தெரிவித்தார்.
கதறும் தந்தை: இது தொடர்பாக நுனுசந்த் மஹ்தோ மேலும் கூறுகையில், "அஜய் எங்களுடன் வசிக்கவில்லை. அவன் போட்டி தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். இதனால் லாட்ஜில் ஒன்றில் ரூம் எடுத்து தனியாகத் தங்கியிருந்தான். 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் டாப் மதிப்பெண்களைப் பெற்றார். ஆனால், அவனுக்கு இந்த ஒரு நிலை ஏற்படும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை" என்றார்.
ஒரு வாரத்திற்கு முன்பு அவருக்குக் கடுமையான பல்வலி ஏற்பட்டது. பல் வலிக்கு மருத்துவரிடம் செல்வதற்குப் பதிலாக அவர், யூடியூபில் சிகிச்சையைப் பார்த்துள்ளார். அவர்கள் சொல்வதைக் கேட்டு அரளி விதைகளை எடுத்துக் கொண்டுள்ளார். யூடியூப்பிலும் கூட அரளி விதைகளைச் சிறிதளவில் மட்டுமே எடுத்துக் கொள்ளச் சொல்லியுள்ளனர். இருப்பினும், இவர் அதிக அளவில் எடுத்துக் கொண்டதே இவரது உயிரைப் பறித்துள்ளது.
மோமோ மரணம்: முன்னதாக சில நாட்களுக்கு முன்பு, பீகாரில் இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. மோமோ சாப்பிடும் சேலஞ்சில் 25 வயது இளைஞன் ஒருவர் ஒரே நேரத்தில் 150க்கும் மேற்பட்ட மோமோக்களை சாப்பிட்டுள்ளார். இதனால் திடீரென மயக்கமடைந்த அந்த பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications