இந்தியை சாய்ஸில் விடுங்கள்.. திணிக்காதீங்க.. படிக்க மாட்டோம்.. கே எஸ் அழகிரி பொளேர்
டெல்லி: இந்தியை விருப்ப மொழியாக விடுங்கள். எந்த மொழியையும் திணிக்காதீர்கள் என டெல்லியில் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருப்பதாவது: கொள்கை ரீதியிலாக தத்துவ ரீதியிலாக செயல்படுகிற ஒரு தலைமை வேண்டும். அந்த தலைமை ராகுல்தான் என நாங்கள் அவரிடம் கூறிவிட்டோம்.
அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். மனநிறைவை அளித்தது. கட்டாயமாக ஒரு மொழி என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். மூன்றாவது மொழியாக நாங்கள் விரும்புவதை படிப்போமே ஒழிய கட்டாயமாக்கினால் அதை ஏற்க முடியாது.

தேர்வு முறை
இந்தி, சமஸ்கிருதம் படிக்க பலருக்கு விருப்பம் இல்லை. எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். மோடி அரசு தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் எதிராக செயல்படுகிறது. மொழி விஷயத்திலும் படிப்பு விஷயத்திலும் தாய்மொழி கண்டிப்பாக இருக்க வேண்டும். தேர்வு முறையானது தமிழ் மொழியிலும் இருக்க வேண்டும்.

முக்கியத்துவம் இல்லை
பொதுத் துறை அலுவலகங்களில் 10000 பேரில் 350 தமிழர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. மத்திய அரசு பணிகளில் தமிழகத்தில் தமிழர்களை நியமிக்க வேண்டும். இறையாண்மையை கட்டிக் காப்பது என்பதற்கு எதிராக மோடி அரசாங்கம் செயல்படுகிறது. தனது அமைச்சரவையில் மோடி தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஒதுக்கீடு
தமிழர்கள் என்று தெரியாதவர்களை போட்டு இவர்கள்தான் தமிழர்கள் என்கின்றனர். தமிழிசை, இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரில் ராஜ்யசபா கொடுத்து அமைச்சர்களாக்கியிருக்கலாம். இதை தமிழர்களுக்கான ஒதுக்கீடு என கருதலாம். எங்கிருந்தாலும் தமிழர்களுடைய பிரதிநிதி என்பவர் வேண்டும்.

என்னவாக போகிறது
அதிமுகவில் ஒரு மித்த கருத்து வருவது என்பது மிகவும் சிரமம். அதிமுகவில் பல குழுக்கள் உள்ளன. அவர்களில் ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகிறார்கள். அதிமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்திருக்கலாம். ஆனால் அதை அவர்களே கேட்டு பெறாத நிலையில் நாம் கருத்து சொல்லி என்னவாக போகிறது.

கருத்து சொன்னதில்லை
அதிமுக என்றில்லை தமிழகத்துக்கு ஒரு பிரதிநிதித்துவம் கொடுக்காதது மிகப் பெரிய இழப்பாகும். நிர்மலா சீதாராமன் தன்னை எப்போதும் தமிழர் என கூறிக் கொண்டதில்லை. ஜெய்சங்கரும் தன்னை தமிழர் என கூறிக் கொண்டதில்லை. தமிழர்களின் பிரச்சினைகளில் அவர்கள் இருவரும் தலையிட்டதில்லை. நீட் தேர்வு சம்பந்தமாக அவர்கள் ஒரு கருத்தையும் சொன்னதில்லை என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications