4 மணிக்கு முன்னாடி கண்டிப்பா முடிக்க மாட்டேன்.. சுப்ரீம் கோர்ட்டை பரபரக்க வைத்த கபில் சிபல்!
டெல்லி: எவ்வளவு நேரம் வாதிடுவீர்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் கேள்வி எழுப்பிய நிலையில், 4 மணிக்கு முன்பாக கண்டிப்பாக முடிக்கமாட்டேன் என பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அவரது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஜூன் 21ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

செந்தில் பாலாஜி வழக்கு: இதற்கிடையே செந்தில் பாலாஜி மனைவியின் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதலில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு இருந்ததால், 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு தடை கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் கஸ்டடியில் எடுக்க வேண்டியது அவசியம்" எனத் தீர்ப்பளித்தார்.
சுப்ரீம் கோர்ட்டில்: இதையடுத்து, அமலாக்கத்துறை எப்போது காவலில் எடுப்பது என்பதை முடிவு செய்ய நேற்று இரு நீதிபதிகள் அமர்வு மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்து, இனி உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இதற்கிடையே, ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில், கைது செய்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில், கைது நடவடிக்கை தவறானது என்றும் ஏற்கனவே 15 நாட்கள் முடிந்த நிலையில் மீண்டும் காவலில் எடுக்க முடியாது என வாதம் முன்வைக்கப்பட்டது.
கபில் சிபல் வாதங்கள்: இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது. அப்படி இருக்கையில் அமலாக்கத்துறையினர் எப்படிக் கைது செய்ய முடியும்?
கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்ய முடியுமா? சுங்க அதிகாரி சம்மந்தப்பட்ட நபரை பிடித்து காவல்துறையில்தான் ஒப்படைக்க முடியும், காவல்துறையினர்தான் கைது செய்ய முடியும். அதுவே அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் பொருந்தும்" என வாதிட்டுள்ளார்.
4 மணிக்கு முன்பு முடிக்க மாட்டேன்: எவ்வளவு நேரம் வாதிடுவீர்கள் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஒரு நாள் முழுவதும் தேவை, இன்று மாலை 4 மணிக்கு முன்பாக கண்டிப்பாக நான் முடிக்க மாட்டேன் என பதில் அளித்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 167 -ன் படி 24 மணி நேரத்தில் விசாரணையை முடிக்க முடியாது என தோன்றினால் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது காவல்துறை அதிகாரிகளுக்கு உட்பட்டதே தவிர இதன் அடிப்படையில் செயல்பட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கிடையாது.
அதே வேளையில் அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகளாக கருதப்படும் வரை இந்த வேறுபாடு என்பது சிக்கலானது. சட்ட விதிகளின்படி கைது செய்யப்பட்டு நடத்தப்படுகிறோமா என்பதை கருத்தில் கொள்ளவும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் செந்தில் பாலாஜிக்கு உரிமை உண்டு என்றும் கபில் சிபல் வாதம் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications