Thug Life: கண்டிப்பாக வெளியாக வேண்டும்.. கர்நாடக அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம்!
டெல்லி: தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், திரைப்படத்தை திரையிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், "கருத்து வேறுபாடுகளுக்காக ஒரு திரைப்படத்தை நிறுத்த வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தது.
கன்னட மொழி, தமிழிலிருந்துதான் தோன்றியது என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனையடுத்து, கமல் நடிப்பில் வெளியான 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மீறி திரையிட்டால் தியேட்டர்கள் அடித்து உடைக்கப்படும் என்றும் பல அமைப்புகள் கண்டனத்தை பதிவு செய்திருந்தன. எனவே இத்திரைப்படம் கர்நாடாகவில் வெளியாகவில்லை.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மகேஷ் ரெட்டி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, "வன்முறை கும்பல்கள் கலைப்படைப்புகளை தடுப்பதை ஏற்க முடியாது. முறையாக சான்று அளிக்கப்பட்ட திரைப்படத்தை திரையிடுவதை, மிரட்டல்களுக்காக நிறுத்தி வைத்திருக்க கூடாது" என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இதனையடுத்து இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், "படத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட முடிவு செய்தால், படத்தின் திரையிடலுக்கு முழு பாதுகாப்பு வழங்குவோம்" என்று கூறியிருந்தது. மாநில அரசின் இந்த கருத்தை வரவேற்ற நீதிமன்றம், இந்த முடிவுக்காக மாநில அரசை பாராட்டியது.
ஆனால், தங்கள் உணர்வுகள் புண்படுவதாக கூறி சிலர் நடத்தும் போராட்டங்களால், கலைப்படைப்புகள் மக்களிடையே சென்றடைவதில் தடை ஏற்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், சர்ச்சைக்குரிய கருத்தை காரணம் காட்டி ஒரு படைப்பை நிறுத்த முடியுமா? ஸ்டான்ட்அப் காமெடியாக இருந்தாலும் சரி, கவிதை வாசிப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அதை நிறுத்த கூடாது.
இந்தியாவில் உணர்வுகளைப் புண்படுத்துவதற்கு முடிவே இல்லை. ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவது சொன்னால், உடனே உணர்வுகள் புண்படுகின்றன என்று சொல்லி சில சட்டவிரோத சம்பவங்கள் நடக்கின்றன. நாம் எங்கே போகிறோம்?" என்று நீதிபதிகள் ஆவேசமாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், அரசின் நிலைப்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தார். அதேநேரம், திரைப்படத்தை வெளியிட சில கும்பல்கள் மிரட்டியதால், திரைப்படம் வெளியாகவில்லை. எனவே ரூ.30 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. மறுபுறம் இந்த கும்பல்கள் மீது எந்த நடவடிக்கையும் மாநில அரசு எடுக்கவில்லை. இது குறித்தும் பிரமாண பத்திரத்தில் எந்த உறுதியும் கொடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கர்நாடக அரசு சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞரை பார்த்து, என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வழக்கறிஞர் "நாங்கள் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். இது தயாரிப்பாளர் மற்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) இடையேயான பிரச்சனை" என்று கூறினார்.
இதற்கு திரைப்பட வர்த்தக சபை வழக்கறிஞர் பதிலளித்தார். "திரைப்படத்தை எதிர்க்கும் கும்பல் எங்களுக்கு எந்த மிரட்டலும் விடுக்கவில்லை. மன்னிப்பு கோர வேண்டும் என்றுதான் சொன்னார்கள். சிலர் மட்டும் அத்துமீறி ஆபிஸுக்குள் நுழைந்தார்கள்" என்று கூற.. உடனே குறிக்கிட்ட நீதிபதிகள், "அத்தமீறல் குறித்து நீங்கள் போலீசில் ஏன் புகார் கொடுக்கவில்லை? அப்படியெனில் நீங்கள் அந்த கும்பலின் பின்னால் ஒளிந்துக்கொண்டிருக்கிறீர்கள் அப்படித்தானே?" என்று கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து கர்நாடகாவில் திரைப்படத்தை திரையிட நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.












Click it and Unblock the Notifications