முதல்வர் பதவிக்கு நெருக்கடி.. சிறப்பு விமானத்தில் டெல்லி விரைந்த எடியூரப்பா.. மோடியுடன் சந்திப்பு
டெல்லி: கர்நாடகாவில் உட்கட்சி பூசல் அதிகரித்து இருக்கக் கூடிய நிலையில் அந்த மாநில முதல்வர் எடியூரப்பா சிறப்பு விமானத்தில் இன்று டெல்லி சென்று சேர்ந்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று சந்திப்பு நிகழ்த்துகிறார். நாளை அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, ஆகியோரை சந்திக்க உள்ளார்.
தனது அமைச்சரவையில் உள்ள சீனியர் அமைச்சர்கள் சிலரை கழட்டி விட்டுவிட்டு புதுமுகங்களை சேர்ப்பதற்கு எடியூரப்பா திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் இதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேலும் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, கர்நாடக ஆட்சி நிர்வாகத்தில் அதிகம் தலையிடுவதாக பாஜகவில் உள்ள பல சீனியர் தலைவர்கள் முணுமுணுப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தனது மகன் விஜயேந்திராவுடன், சிறப்பு விமானத்தில் எடியூரப்பா டெல்லி சென்றிருக்கிறார்.

மோடியுடனான இன்றைய இரவு நேர சந்திப்பின்போது, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்க உள்ளார். கர்நாடக நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் பற்றி அவரிடம் பேச இருப்பதாக எடியூரப்பா தெரிவித்தார்.
அமித் ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோருடன் கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்புக்கு அனுமதி வழங்குமாறு மற்றும் ஆதரவு தருமாறு அவர் கேட்டுக் கொள்ள உள்ளார்.
பாஜக முக்கிய பிரமுகர்களான விஜயபுரா எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால், சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி. யோகேஸ்வர் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர் ஏ.எச். விஸ்வநாத் ஆகியோர் எடியூரப்பாவை வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
எடியூரப்பாவுக்கு 78 வயதாவதால் அவரது தலைமையை மாற்றி வேறு முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில்தான், எடியூரப்பா டெல்லி சென்றுள்ள நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக், அளித்த பேட்டியில் "இது நார்மலான பயணம். வேறு எதுவும் இல்லை. கர்நாடகாவில் தலைமை மாற்றம் இல்லை. எடியூரப்பா முதல்வராக தொடருவார். பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் கட்சித் தலைவரைச் சந்திக்க டெல்லிக்கு சென்றுள்ளார். பிற மத்திய அமைச்சர்கள் குறிப்பாக நீர்ப்பாசன அமைச்சரையும் சந்தித்து காவிரி நதி, மேகதாது பிரச்சினை பற்றியும் பேசுவார்." இவ்வாறு அசோக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications