தமிழகத்திற்கு மிக அருகே மேகதாது.. மத்திய அமைச்சரை சந்தித்த கர்நாடகா முதலமைச்சர்.. திடீர் திருப்பம்
டெல்லி: மேகதாது விவகாரம் மீண்டும் தீவிரமாகியுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முழு வேகத்தில் பணியாற்றி வருகிறது. விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரை சந்தித்து கர்நடகா முதலமைச்சர் சிவகுமார் வலியுத்தினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் பயங்கர எதிர்ப்பு எழுந்து வருகிறது. அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தி முயற்சித்தார். ஆனால் கர்நாடகா அரசு பேச்சுவார்த்தைக்கு மறுத்துவிட்டது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.

ரூ.16,000 கோடியில் மேகதாது
மேகதாது திட்ட அறிக்கை தொடர்பான வழக்கில் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. இதனால் கர்நாடகா அரசு திட்ட அறிக்கை தயாரித்து மத்திய நீர் ஆணையத்தில் சமர்ப்பித்தது. அதில் பல திருத்தங்கள் செய்ய வேண்டியதால், கர்நாடகா அரசுக்கு திருப்பியனுப்பப்பட்டது. இதையடுத்து கர்நாடகா அரசு திட்ட அறிக்கையை திருத்தி மீண்டும் மத்திய நீர் ஆணையத்தில் கடந்த மாதம் சமர்ப்பித்தது. மேகதாது அணை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டுகிறது.
ரூ.16,745 கோடியில் மேகதாது அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் பாட்டீலை, கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவகுமார் சந்தித்தார். அப்போது மேகதாது அணை மற்றும் குடிநீர் திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க அவர் கோரிக்கை வைத்தார். இந்த சந்திப்பு குறித்து டெல்லி கர்நாடகா அரசு இல்லத்தில் அம்மாநில முதலமைச்சர் சிவகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தமிழகத்திற்கு மிக அருகே
அதில், "கர்நாடகாவின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும், வறட்சியை எதிர்கொள்ளவும் இத்திட்டம் அவசியமானது. கர்நாடகாவில் 200க்கும் மேற்பட்ட வட்டங்கள் வறட்சி பாதிப்பு அபாயத்தில் உள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் ஏற்கனவே கள ஆய்வு செய்துள்ளனர். இது விவசாய பசானத்திற்கு பயன்படுத்தப்படாது. இதற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். 12,000 ஏக்கர் வனப்பகுதியில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கு மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பெங்களூர் குடிநீர் விநியோகத்துடன் இணைக்கப்படும். தமிழக எல்லையில் இருந்து 3 கிமீ தொலைவில் அணை அமைய உள்ளது. எனவே இதை தவறாக பயன்படுத்த வாய்ப்பில்லை. அதனால் தான் தமிழக அதிகாரிகளை நேரில் ஆய்வு செய்ய அழைப்பு விடுத்தோம். கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் கோரிக்கை வைத்தோம். பிரதமர் கிருஷி சிஞ்சாயி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
