கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை.. தமிழக அரசு வாதம்.. தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிரான தவெக மனு மற்றும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அதேபோல் தமிழ்நாடு அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதன்பின் சில நாட்கள் அமைதி காத்த விஜய், 3வது நாளில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். கரூர் சம்பவத்தின் போது விஜய் மட்டுமல்லாமல் தவெகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும், கட்சியினரும் தலைமறைவாகினர். இன்று வரை புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலுக்கு சில ரவுடிகளால் முன்கூட்டியே திட்டமிட்ட சதியே காரணம் என்பதை மறுக்க முடியாது.
சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கரூர் விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தவெக சார்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மனுவை விரைந்து விசாரிக்க தவெக சார்பாக முறையிடப்பட்டது.
இதனிடையே கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தவெகவின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி உள்ளது. அப்போது தவெக தரப்பில்,எங்கள் தரப்பில் விளக்கமே கேட்காமல், உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கரூரில் இருந்து போலீசாரின் கட்டாயத்தால் விஜய் வெளியேறினார். பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது என்று தவெக தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து, கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடக்கட்டும். முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும். தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் கோரிய வழக்கில் எப்படி இரு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழக அரசு தரப்பில், மதுரை அமர்வு, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சென்னை அமர்வு இதனை விசாரிப்பதை மேற்கோள் காட்டி, அங்கு முறையீடு செய்ய அறிவுறுத்தியது என்று தெரிவித்தது. தொடர்ந்து மதிய உணவுக்கு பின் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் மற்றொரு விசாரணையும் நடைபெறுகிறது. தற்போது உயர்நீதிமன்றம் திறமையான அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. அதனால் சிபிஐ விசாரணை தேவை இல்லை.
தேர்தல் பிரப்புரையின் போது ரவுடிகள் களமிறக்கப்பட்டார்கள். ஆளுங்கட்சியின் நபர்காள் களமிறக்கப்பட்டார்கள் என்று கூறுவதெல்லாம் ஏற்க முடியாது. இதற்கான எந்தவொரு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அதேபோல் தமிழக அரசுக்கு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications