"அமித்ஷாவை நீக்குங்க".. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் பாஜகவில் எழுந்த கலகக்குரல்.. யாருனு பாருங்க
டெல்லி: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியான விவகாரத்தில் பிரதமர் மோடி தன்னை காப்பாற்றி கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தலத்துக்குள் நேற்று நுழைந்த 4 பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு சுற்றுலா பயணிகளை கொன்றனர். இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகினர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி மொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ்
சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு ஏற்றுள்ளது. பிரதமர் மோடியும் இந்த தாக்குதலை கோழைத்தனமானது என்று விமர்சனம் செய்துள்ளார். அதோடு 2 நாள் பயணமாக சவூதி அரேபியாவுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி அவசரஅவசரமாக இன்று நாடு திரும்பினார்.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் காரணமாக அவர் சவூதி அரேபியா பயணத்தை பாதியில் கைவிட்டு நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசித்தார். மத்திய உள்துறை அமைச்சர் நேற்றைய தினமே ஸ்ரீநகர் சென்று அங்கு உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் இன்னும் சிக்கவில்லை. அவர்கைள தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛வெளிநாட்டிலிருந்து மோடி இரங்கல் தெரிவிப்பதால் என்ன பயன்? இந்த காஷ்மீர் துரோகம் மிக மோசமானது. மோடி தன்னை காப்பாற்றி கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
அதன்பிறகு இன்று காலையில் சுப்பிரமணியன் சுவாமி இன்னொரு பதிவை செய்திருந்தார். அதில், அவர், ‛‛அப்பாவிகளை மட்டுமே அமித்ஷாவால் எதிர்கொள்ள முடியும். மற்றபடி பயங்கரவாதிகள் என்று வந்தால் அவர்கள் படுகொலை நிகழ்த்திவிட்டு சென்ற பிறகு தான் அங்கு வருவார். ஏகே 47 வைத்திருந்தால் மட்டுமே பெரும்பான்மை முஸ்லிம்களில் ஒருபகுதியினர் தைரியமானவர்கள் என்று நினைத்தால் அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களையும் ஆயுதங்களுடன் குடியேற சொல்லுங்கள்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications