கொல்கத்தா சட்டக் கல்லூரியில்.. மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! 3 பேர் அதிரடி கைது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், சட்ட கல்லூரியில் வைத்து மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு இதேபோல ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் வைத்து, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் அதிர்வுகள் குறைவதற்குள் தற்போது மற்றொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஸ்பா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைதானவர்களில் முன்னாள் மாணவர் ஒருவர் மற்றும் தற்போது படித்துவரும் மாணவர் என்றும், மூன்றாவது நபர் கல்லூரி ஊழியர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவி சித்தரஞ்சன் தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 25ஆம் தேதி புதன்கிழமை மாலை 7:30 மணி முதல் 8:50 மணிக்குள் கல்லூரி வளாகத்தில் வைத்து இந்த வன்கொடுமை தாக்குதல் நடந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். புகாரை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தடயங்களை சேகரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் அடுத்த 24 மணி நேரத்தில் போலீஸ் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. முதலில் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரின் கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி வளாகத்திற்குள் இத்தகைய கொடூரமான சம்பவம் எப்படி நடந்தது என்ற விசாரணை நடைபெற்று வருகின்றன.
தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.ஜி.கர் மருத்துவமனை சம்பவத்தின்போதே, மாநில அரசுக்கு எதிராக பாஜக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், இந்த சம்பவம் போராட்டங்களை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications