‛‛பதவியேற்பில் தமிழ் புறக்கணிப்பு’’.. தெலுங்கில் உறுதிமொழி ஏற்ற கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி!
டெல்லி: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்பிக்களாக நேற்றும், இன்றும் பதவியேற்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வென்ற 40 எம்பிக்கள் 2வது நாளான இன்று பதவியேற்றனர். மதியம் 2.15 மணிக்கு தமிழக எம்பிக்கள் ஒவ்வொருவராக பதவியேற்றனர்.

முதலில் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் பதவியேற்றார். அதன்பிறகு திமுக, காங்கிரஸ் உள்பட திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் பதவியேற்றனர்.
இந்த பதவியேற்பு விழாவின்போது கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி கோபிநாத் தமிழ் மொழிக்கு பதில் தெலுங்கு மொழியில் பதவியேற்றார். ‛‛மக்களவையின் உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் நான் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்'' என கடவுள் பெயரில் பதவியேற்றார்.
அதன்பிறகு கடைசியாக ‛‛நன்றி... வணக்கம்'' என தமிழில் கூறிய பிறகு ‛‛ஜெய் தமிழ்நாடு'' என்று கூறினார். தமிழக எம்பிக்கள் அனைவரும் இன்று தமிழ் மொழியில் பதவியேற்ற நிலையில் கோபிநாத் மட்டும் தெலுங்கு மொழியில் எம்பியாக பதவியேற்றார். பெரும்பாலான எம்பிக்கள் தமிழ் வாழ்க.. வாழ்க தமிழ்நாடு என்று கூறிய நிலையில் கோபிநாத் ஜெய் தமிழ்நாடு என்று முழங்கினார்.
கிருஷ்ணகிரி எம்பியாக தேர்வாகி உள்ள கோபிநாத் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அந்த தொகுதியில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 883 ஓட்டுகள் வாங்கினார். இவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 3 லட்சத்து 397 ஓட்டுகள் வாங்கினார். இதனால் ஜெயப்பிரகாசை, 1,92,486 ஓட்டுகள் வித்தியாசத்தில் கோபிநாத் கிருஷ்ணகிரி தொகுதியில் வெற்றி பெற்றார்.
மேலும் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் நரசிம்மன் 2 லட்சத்து 14 ஆயிரத்து 125 ஓட்டுகளை பெற்று 3ம் இடம் பிடித்தார். நாம் தமிழர் வேட்பாளரான வீரப்பன் மகள் வித்யாராணி 1,07,083 ஓட்டுகள் பெற்று 4ம் இடம் பிடித்தார். இந்த தொகுதியில் நோட்டா 10,983 ஓட்டுகள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications