45 இந்தியர் உடல்களுடன் கொச்சியில் வந்திறங்கும் சிறப்பு விமானம்.. குவைத் தீ விபத்து.. நியூ அப்டேட்ஸ்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குவைத் தீ விபத்தில் ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 45 இந்தியர்களுடன் குவைத்தில் இருந்து கொச்சிக்கு இந்திய விமானப் படையின் விமானம் வந்து சேருகிறது.
குவைத் தீ விபத்து தொடர்பான புதிய தகவல்கள்:

- குவைத் தீ விபத்தில் இறந்த 45 இந்தியர் உடல்களுடன் இந்திய விமானப் படையின் C-130J சரக்கு விமானம் கேரளாவின் கொச்சியை இன்று வந்தடைகிறது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் உடல்கள் கொச்சி விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ளப்படும்.
- கொச்சி விமான நிலையத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்களை தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொள்வார். பின்னர் அங்கிருந்து 7 பேரின் உடல்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தனித்தனி வாகனங்களில் அனுப்பி வைக்கப்படும்.
- கொச்சியில் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் உடல்களை ஒப்படைத்த பின்னர் விமானப் படையின் சிறப்பு விமானம் டெல்லிக்குப் புறப்படும். டெல்லியில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உடல் ஒப்படைக்கப்பட்டு அங்கிருந்து சொந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
- குவைத் தீ விபத்தில் இறந்த 45 இந்தியர்களின் உடல்களும் மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் உறுதி செய்யப்பட்டே இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . அதனால் எவ்வித பரிசோதனைகளும் இல்லாமல் சொந்த ஊர்களில் நல்லடக்கம் நடைபெறும்.
- கொச்சி வரும் இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்திலேயே மத்திய இணை அமைச்சர் கேவி சிங் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்து சேருகின்றனர். முன்னதாக குவைத்தில் அந்நாட்டு அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார் கேவி சிங். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
- குவைத் தீ விபத்து தொடர்பாக அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் பல வெளிநாட்டினரையும் குவைத் அரசு கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. மின்சார கசிவால் தீ விபத்து ஏற்பட்டது என்பது குவைத் அரசின் கருத்து.
- தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது
- வெளிநாடு வாழ் தொழிலதிபர் மற்றும் லூலு குழுமத்தின் அதிபர் யூசுப் அலி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ5 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடி மத்திய அரசு சார்பில் ரூ2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
- குவைத் தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 3 பேரும் இந்த தீ விபத்தில் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications