ரொம்ப மோசம்.. 17 ஆண்டில் பணமோசடி தடுப்பு சட்டத்தில் 5,422 வழக்குகள்.. 23 பேருக்கு மட்டுமே தண்டனை
புதுடெல்லி: பணமோசடி தடுப்பு சட்டம் (பிஎம்எல்ஏ) நாட்டில் அமலாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் மொத்தம் 5,422 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இதில் வெறும் 23 பேர் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
பணமோசடி தடுப்பு சட்டம் (பிஎம்எல்ஏ) கடந்த 2002ம் ஆண்டில் இயற்றப்பட்டது. 2005ம் ஆண்டு ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த பணமோசடி தடுப்பு சட்டம் மூலம் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்தால் அமலாக்க இயக்குனரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மத்திய அமைச்சர் பதில்
தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைெபெற்று வரும் நிலையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில் லோக்சபாவில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பி ராஜீவ் ரஞ்சன் சிங் பணமோசடி தடுப்பு சட்டம் குறித்து சில கேள்விகளை கேட்டு இருந்தார். இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

23 பேருக்கு மட்டுமே தண்டனை
அதில், ‛‛2022 மார்ச் 31வரை அமலாக்க இயக்குனரகத்தின் சார்பில் பணமோசடி தடுப்பு சட்டம் (பிஎம்எல்ஏ)மூலம் 5,422 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் அடிப்படையில் பார்த்தால் தோராயமாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 702 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.869.31 கோடி பறிமுதல் சொத்துகள் பணமோசடி தடுப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டு 23 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 992 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டு இருந்தது. பணமோசடி தடுப்பு சட்டம் அமலாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் அதனடிப்படையிலான செயல்பாடு மிகவும் மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அந்நிய செலாவணி மோசடி வழக்கு
மேலும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரமும் மத்திய அமைச்சரின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1973ன் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தை (எப்இஆர்ஏ)ரத்து செய்த பிறகு 1999ல்அந்திய செலாவணி மேலாண்மை சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் மொத்தம் 30,716 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 8,109 வழக்குகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 6,472 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் ரூ.1,080 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உறுதி செய்த உச்சநீதிமன்றம்
இதற்கிடையே தான் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்து அரசில்வாதிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. அதில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு கைது செய்வது, பறிமுதல் செய்வது, விசாரணை செய்வது, சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவினருக்கும் இருக்கும் அதிகாரத்தை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.












Click it and Unblock the Notifications