3 ஆண்டு சிறை + ஃபைன்.. வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது கிரிமினல் குற்றம்! 2 சபையிலும் நிறைவேறிய மசோதா
டெல்லி: 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்க வகை செய்யும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்ட திருத்த மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேறியது. இதையடுத்து இன்று திமுக உள்பட பல எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு நடுவே இன்று லோக்சபாவில் நிறைவேறியது.

மத்திய அரசு 'வந்தே மாதரம்' எனும் தேசிய பாடலை நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிகழ்ச்சி, ஆளுநர் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொடக்கம் மற்றும் முடிவில் 'வந்தே மாதரம்' பாடலை முதலில் பாட வேண்டும். அதன்பிறகு தேசிய கீதம் பாடலை பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தான் 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் அதற்கு வழங்கப்படும் தண்டனை, அபராதம் உள்ளிட்டவற்றிக்காக தற்போதுள்ள, 'தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971'-யை திருத்துவதற்கான மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.
இந்த மசோதா 'தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026' என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது. மசோதாவை கடந்த 24ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். அதன்பிறகு விவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. நேற்று ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேறியது.
அதன்பிறகு இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. இந்த சமயத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திமுக சார்பில் கனிமொழி எம்பி பேசும்போது, ''வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் தேச உணர்வை மக்களிடம் திணிக்க முடியாது. வந்தே மாதம் கட்டாயம் என்ற மசோதா கூட்டாச்சி தத்துவத்துக்கு எதிரானது.
மாநில பாடலை வைத்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களை மத்திய அரசு அமவதிக்கிறீது. ஏன் இப்படி நாட்டை பிளவுப்படுத்துகிறீர்கள்?'' என்ற கொந்தளித்து பேசினார். அதேபோல் திமுக எம்பி ஆ ராசா பேசுகையில், ''இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் சாவர்க்கரும், இந்த வந்தே மாதரம் பாடலும் தான்'' என்று சாடினார். இருப்பினும் கூட இறுதியில் கடும் எதிர்ப்புக்கு நடுவே இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா ராஜ்யசபா, லோக்சபா என 2 சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இனி எளிதாக சட்டமாகிவிடும். இந்த மசோதாக்கள் இனி ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் வழங்கியவுடன் நம் நாட்டின் சட்டமாகும். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு வந்தே மாதரம் எனும் தேச பாடல் அவமதிக்கப்பட்டால் அவர்களுக்கு 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது 3 ஆண்டு சிறையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
