வாரிசுகளுக்கு வாய்ப்பு.. காங்கிரஸின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. இப்போதும் தமிழகம் இல்லை
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2ம் கட்ட பட்டியலை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் இன்று டெல்லியில் வெளியிட்டுள்ளார். இதில் மொத்தம் 43 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரமாக தொடங்கி உள்ளன. பாஜக, காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

பாஜக சார்பில் முதற்கட்டமாக 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் சார்பில் கடந்த 8 ம் தேதி முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் ராகுல் காந்தி மீண்டும் கேரளா வயநாட்டில் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 2வது கட்டமாக இன்று டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில் மொத்தம் 43 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்த 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் என்பது அசாம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், டையூ டாமன், உத்தரகாண்ட் மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை மட்டுமே உள்ளடக்கி உள்ளது.
அதன்படி அசாம் மாநிலத்தில் 12 தொகுதி, குஜராத் மாநிலத்தில் 7 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 10, ராஜஸ்தானில் 10, உத்தரகாண்ட்டில் 3 மற்றும் டையூ-டாமன் தொகுதி என மொத்தம் 43 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2ம் கட்ட பட்டியலில் பொதுப்பிரிவை சேர்ந்த 10 பேர், எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்த 10 பேர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேட்பாளர்களில் 25 பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் அசாம் மாநிலம் ஜோர்காட் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நகுல் நாத் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது அங்கு சிட்டிங் எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் அந்த மாநிலத்தின் ஜாலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
कांग्रेस अध्यक्ष श्री @kharge की अध्यक्षता में आयोजित CEC की बैठक में लोकसभा चुनाव, 2024 के लिए 43 लोकसभा सीटों पर कांग्रेस उम्मीदवारों की दूसरी लिस्ट जारी की गई। pic.twitter.com/kgWoEkzKt6
— Congress (@INCIndia) March 12, 2024
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை போலவே இந்த 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் அதோடு புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட உள்ளது என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. இதனால் தான் தமிழகத்துக்கான காங்கிரஸ் வேட்பாளர்களின் விபரம் இன்றைய 2ம் கட்ட பட்டியலிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கத்தது.












Click it and Unblock the Notifications