'இந்தியா’வில ஸ்டாலின் தான் கெத்து..ஏமாற்றத்தை சந்திக்கும் மம்தா,கெஜ்ரிவால்? இந்தியா டுடே செல்வதென்ன?
டெல்லி: இந்தியா கூட்டணியில் இருக்கும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் முதல்வராக இருக்கும் மாநிலங்களில் தமிழகம் தவிர்த்து மற்ற பகுதிகளில் பாஜகவின் ஆதிக்கமே இருக்கும் என இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பெரிய அளவில் பின்னடைவை சந்திக்கும் என அந்நிறுவனம் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 18 வது மக்களவைக்கு 543 மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தொடங்கி இன்று வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.

ஏழாம் கட்ட வாக்குப்பதிவு பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் காலை 7:00 மணிக்கு தொடங்கி நிலையில் 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 5.8 லட்சம் மக்களிடையே நடத்தப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின் படி பாஜக அதிக தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தமிழகம் தவிர்த்து முக்கிய மாநிலங்களில் பாஜகவே வெற்றி பெறும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா கூட்டணியில் முதல்வராக இருக்கும் முக்கிய தலைவர்கள் என்று பார்க்கும்போது தமிழகத்தில் ஸ்டாலின், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கின்றனர்.
தற்போது இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஸ்டாலின் தான் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியை சேர்ந்த முதல்வராக இருக்கிறார். தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 33 முதல் 37 இடங்கள் வரையும், பாஜக இரண்டு முதல் நான்கு இடங்களை பெறலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக இரண்டு இடங்கள் வரை பெற வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் பாஜகவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது. அங்கு 33 முதல் 25 தொகுதிகள் வரை அக்கட்சி வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாஜக இரண்டு முதல் மூன்று தொகுதிகள் வரை வெல்லலாம் என கணிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் பாஜக 20 முதல் 27 தொகுதிகளை, அதாவது தி.காங்கிரஸை விட அதிக தொகுதிகளை வெல்லும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளும் டெல்லியிலும் பாஜகவே 7 தொகுதிகளையும் வெல்லும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications