காங்கிரஸுக்கு மூச்சே போச்சு.. 14 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எத்தனை கேட்டது தெரியுமா?
டெல்லி: லோக்சபா தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் சரிபாதி இடங்களை ஒதுக்க வேண்டும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிபந்தனை விதித்திருப்பது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக "இந்தியா" கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஜார்க்கண்ட் மாநில தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரையில் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 56% வாக்குகளுடன் 11 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. 7 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்திலும் 4 இடங்களில் போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 1 இடத்திலும் வென்றது. 1 இடத்தில் வென்ற ஏஜேஎஸ்யூ பின்னர் பாஜகவில் இணைந்தது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கை ஓங்கி இருக்கும்; லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கைதான் ஓங்கி இருக்கும். தற்போதும் கூட ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடனேயே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
ஆனால் டெல்லியில் நேற்று நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இன்னொரு முகத்தை காட்டியது காங்கிரஸை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதாவது மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 7 தொகுதிகளை கொடுத்துதான் ஆக வேண்டும் என அடம் பிடிக்கிறதாம். 4 தொகுதி, 3 தொகுதி கணக்கெல்லாம் இனி செல்லாது; கேட்கிற தொகுதிகளை கொடுங்க.. ஆளுக்கு 50% 50% ஷேர் என பிரித்துக் கொண்டு சுமூகமாக தேர்தலில் போட்டியிடுவோம் என மிரட்டி இருக்கிறதாம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைப் பொறுத்தவரை தீவிர பாஜக எதிர்ப்பு கட்சியும் அல்ல. பாஜகவுடன் கை கோர்க்கவும் தயங்காத கட்சிதான். அதனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மிரட்டல் காங்கிரஸ் மேலிடத்தை ரொம்பவே அதிரவைத்திருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications