10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு
டெல்லி: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு முதல் இரண்டு பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், முதல்கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும்; இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு கட்டாயம் அல்ல எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026 ஆம் ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த உள்ளது. மத்திய இடை நிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ- யில் வரும் கல்வி ஆண்டு முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2 முறை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரியிலும், இரண்டாவது கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறும். மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த நடைமுறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வுக்கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்ட பொதுத்தேர்வில் முதல் கட்ட தேர்வை தேர்வர்கள் எழுதுவது கட்டாயம் எனவும், இரண்டாவது பொதுத்தேர்வை எழுதுவது அவர்களது விருப்பம் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. முதல் பொதுத்தேர்வில் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் ஆகியவற்றில் ஏதேனும் மூன்றில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்" என்றார்.
பிப்ரவரி, மே மாதத்தில் தேர்வுகள்
அதே நேரத்தில் உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என சிபிஎஸ் இ அறிவித்துள்ளது. முதல் கட்ட பொதுத்தேர்வு பிப்ரவரி மாதத்திலும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு மே மாதத்திலும் நடைபெறும். இதேபோன்று முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஏப்ரலிலும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஜூனிலும் வெளியிடப்படும்.
தேசிய கல்விக்கொள்கை 2020 அடிப்படையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை பயமின்றி எழுதும் வகையில் பொதுதேர்வு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் ஒரு வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த வரைவு அறிக்கையில், பத்தாம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.
அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்
இந்த பரிந்துரை மீது பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான், அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததன்படி, புதிய நடைமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்வில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பெற்ற சிறந்த மதிப்பெண் அவர்களின் சான்றிதழில் இடம் பெற்று இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பொதுத்தேர்வை ஒருமுறை மட்டுமே மாணவர்கள் எழுதி வரும் நிலையில், வரும் ஆண்டில் முதல் முறையாக அமல்படுத்தப்படும் இந்த புதிய முறை மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications