இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை முன்மொழிந்த மம்தா? பதறிய கார்கே.. என்ன நடந்தது?
டெல்லி: இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளரை மம்தா பானர்ஜி முன்மொழிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பாஜக, வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில் பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உள்பட 29 கட்சிகள் இணைந்து ஒருங்கிணைந்து நாடு முழுவதும் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயர் வைத்துள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூரிலும் மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சி தனது முழு கவனத்தையும் அங்கு திருப்பியது. இதனால், இந்தியா கூட்டணிக்கு சில சலசலப்புகள் எழுந்தன. இந்தியா கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு மத்திய பிரதேசத்தில் சீட் ஒதுக்க காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததாக அகிலேஷ் குற்றம் சாட்டினார்.
டெல்லியில் ஆலோசனை கூட்டம்: மேலும் காங்கிரசை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில், ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடவை ஏற்படுத்தியது. கூட்டணிக்குள் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ் கட்சியின் கனவு தவிடுபொடியானது.
இத்தகைய சூழலில், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,
முதல்வர் வேட்பாளர் யார்?: ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டு கட்சித் பரூக் அப்துல்லா, இடதுசாரித் தலைவர்கள் டி ராஜா, சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மம்தா பானர்ஜி முன்மொழிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இதை ஏற்க மல்லிகார்ஜுன கார்கே மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications