CM விஜய் குறித்து அவதூறு கருத்து.. தொழிபதிபரை டெல்லி ஏர்போர்ட்டில் கைது செய்த சைபர் கிரைம் போலீசார்!
டெல்லி: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பிரவீன் கணேசன் என்பவரை டெல்லி ஏர்போர்ட்டில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் கடந்த மே 7 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது. ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். தவெக அரசு குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சமூகவலைதளங்களில் முதல்வர் விஜய் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிடுவோருக்கு எதிராக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த ஜூன் மாதம் சமூகவலைதளங்களில் முதல்வர் விஜய் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட, பிரவீன் கணேசன் என்பவரை டெல்லி விமான நிலையத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தொழிலதிபரான பிரவின் கணேசன், கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டு அதன் பிறகு அவற்றை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. எனினும், அவரது பதிவு வைரலாக மாறியது.
இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சைபர் கிரைம் காவல்துறை தரப்பில் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இந்த நோட்டீஸின் அடிப்படையில் தற்போது அவர் டெல்லி விமான நிலையத்தில் வைத்து சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரவின் கணேசன் டெல்லிக்குச் சென்றிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றபோது சைபர் கிரைம் போலீசார் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது.
தற்போது அவர் டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரிடம் அவதூறு கருத்துகளை பதிவிட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
