பதறும் "வடக்கு".. அங்கே பற்றி எரியும் மணிப்பூர்.. இங்கே கதறிய ஐடி "ஹப்" குர்கிராம்! என்ன நடக்குது?
டெல்லி: 2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வட மாவட்டங்களிலும், வடகிழக்கு மாவட்டங்களிலும் மத மற்றும் ஜாதி ரீதியிலான மோதல்கள் தலையெடுக்க தொடங்கி உள்ளன. அப்பகுதி மக்கள் இடையே இந்த மோதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. இந்த தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன. இன்னொரு பக்கம் மாநில கட்சிகளும் தேர்தலுக்காக பிரச்சாரங்கள், வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டன.

தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில்தான் திடீரென வட மாவட்டங்களிலும், வடகிழக்கு மாவட்டங்களிலும் போராட்டங்கள் கலவரங்கள் வெடிக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக மத மற்றும் ஜாதி ரீதியிலான மோதல்கள் தலையெடுக்க தொடங்கி உள்ளன. சர்வதேச அளவில் இந்த மோதல்கள் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
குர்கிராம் கலவரம்: இந்தியாவின் ஐடி ஹப்களில் ஒன்று குர்கிராம். எங்கே பார்த்தாலும் ஹை ரைஸ் கட்டிடங்கள், ஐடி நிறுவனங்கள், கண்கவர் சுற்றுலா அமைப்புகள் என்று மிக வேகமாக வளர்ந்த சாட்டிலைட் நகரம்தான் குர்கிராம். ஆனால் அப்படிப்பட்ட குர்கிராம் தற்போது மத கலவரத்தால் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது.
குர்கிராமில் கடந்த திங்கள் கிழமை தொடங்கிய கலவரம் கடந்த 4 நாட்களாக விடாமல் நடந்து கொண்டு இருக்கிறது. அங்கே நு என்ற பகுதியில் தொடங்கிய கலவரம் தற்போது மற்ற பகுதிகளுக்கு பரவி உள்ளது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு பஜ்ரங் தள் அமைப்புடன் சேர்ந்து கடந்த திங்கள்கிழமை குர்கிராமில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதை குருகிராமில் உள்ள சிவில் லைன்ஸில் இருந்து பாஜக மாவட்டத் தலைவர் கார்கி கக்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். யாத்திரைக்கு
பாதுகாப்பு வழங்க போலீஸ் படையும் கொண்டு வரப்பட்டது. நல்ஹார் என்ற பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்வதே இந்த யாத்திரையின் நோக்கம்.

காலை தொடங்கிய யாத்திரையில் பிற்பகலில் கலவரம் ஏற்பட்டது. நு பகுதியில் உள்ள க்ஹெட்ல முட் என்ற பகுதிக்கு வரும் போது அங்கே இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர், அங்கே உள்ள இஸ்லாமியர்களை தாக்க முயன்றனர், நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசினர், அதேபோல் இஸ்லாமிய இளைஞரை மாட்டிறைச்சிக்காக கொண்ட மோனு மனேசர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார், இதுதான் கலவரத்திற்கு காரணம் என்று இஸ்லாமியர்கள் கூறுகின்றனர்.
அந்த பகுதிக்கு சென்றதும் இஸ்லாமியர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர், எங்கள் ஊர்வலத்தை அனுமதிக்கவில்லை, கற்களை வீசினர், இது இஸ்லாமிய ஏரியா என்று கூறி அனுமதிக்கவில்லை என்று இந்துக்கள் கூறுகின்றனர். இதுதான் அங்கே ஏற்பட்ட கலவரத்திற்கு சொல்லப்படும் காரணங்கள். கடந்த நான்கு நாட்களாக நடக்கும் கலவரத்தில் அதிகாரபூர்வமாக 4 பேர் பலியாகி உள்ளனர். 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டு உள்ளது. 200க்கும் மேற்பட்ட வீடுகள் கொளுத்தப்பட்டு உள்ளது.
500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்மாறி உள்ளனர். கிட்டத்தட்ட 400 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதனால் மொத்த குர்கிராமும் பதற்றத்தை உச்சத்தில் உள்ளது.
மணிப்பூர்: இங்கே மத கலவரம் நடக்க இன்னொரு பக்கம் மணிப்பூரில் இனக்கலவரம் உச்சத்தில் உள்ளது. மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக ஆண்களால் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பெண்களின் அந்தரங்க உறுப்புகளை தாக்கி நடுரோட்டில் மக்கள் முன் பரேட் போல கொண்டு சென்று உள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற அவமானகரமான விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயம் வரலாறு முழுக்க பதிவாகும் அளவிற்கு மக்கள் மனதை பாதித்து உள்ளது. அதில், நடுரோட்டில் இருந்து பொட்டை காடு ஒன்றிற்கு அழைத்து சென்று அங்கே இந்த பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட ஆண்கள் அங்கே இருக்க.. பல ஆண்கள் இரண்டு பெண்களையும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
மோதல் உச்சம்: மணிப்பூரில் மெய்ட்டி பிரிவினருக்கும் குகி மலைவாழ் மக்களுக்கும் இடையில் நடந்த மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது. அங்கே மெய்ட்டி பிரிவினருக்கு எஸ்டி இடஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிராக குகி பிரிவு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக குகி பிரிவினர் செய்த போராட்டம் தற்போது கலவரத்தில் முடிந்துள்ளது. அங்கே மெய்ட்டி பிரிவினர் பெரும்பாலும் ஓபிசி பிரிவில் உள்ளனர். இன்னும் சிலர் எஸ்சி பிரிவில் உள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு எஸ்டி அந்தஸ்து, இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த மார்ச் 27ம் தேதி, எஸ்டி பட்டியலில் மெய்ட்டி பிரிவை சேர்ப்பதற்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க மணிப்பூர் மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கோரிக்கையை முன் வைத்து மெய்ட்டி பிரிவை சேர்ந்த இடஒதுக்கீடு ஆர்வலர்கள் தாக்கல் செய்த பல மனுக்களை விசாரித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.இதை எதிர்த்து எஸ்டி பிரிவை சேர்ந்த பழங்குடி இன மக்களான குகி மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதுதான் அங்கு கலவரத்திற்கு காரணமாக மாறி உள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடக்கும் இந்த கலவரம் இப்போதைக்கு முடியும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. 2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வட மாவட்டங்களிலும், வடகிழக்கு மாவட்டங்களிலும் மத மற்றும் ஜாதி ரீதியிலான மோதல்கள் தலையெடுக்க தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications