டோட்டலா மாறுதே! அது என்ன விதி 176.. ராஜ்யசபா தலைவரை சந்தித்த வடகிழக்கு மாநில எம்பிக்கள்! ட்விஸ்ட்
டெல்லி: மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்ற விதி 267 ன் கீழ் விவாதிக்க வேண்டும் என ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக விதி 176ன் கீழ் விவாதம் வேண்டும் என வடகிழக்கு மாநில எம்பிக்கள் அதன் தலைவர் ஜெகதீப் தன்கரிடம் கடிதம் வழங்கி உள்ளனர். இந்நிலையில் தான் விதி 176 என்பது என்ன? அந்த விதியின் கீழ் விவாதிக்க வடகிழக்கு மாநில எம்பிக்கள் அனுமதி கோரியது ஏன்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு வசிக்கும் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். இந்நிலையில் தான் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மைத்தேயி பிரிவு மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. வன்முறை தொடங்கி 3 மாதங்களை தொடும் நிலையில் இன்னும் அங்கு நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே தான் மே மாதம் 4ம் தேதி குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி நாட்டைையே உலுக்கியது.
இதற்கிடையே தான் கடந்த 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க வேண்டும். பிரதமர் மோடி பதிலளித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால் இரு சபைகளின் தலைவர்கள் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் தான் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீசை காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சியினர் வழங்கினர். இந்த நோட்டீஸ் ஏற்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மத்திய அரசு லோக்சபாவில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. முன்னதாக விவாதம் என்பது நடக்க உள்ளது. இதற்கான தேதியை சபாநாயகர் ஓம்பிர்லா நிர்ணயம் செய்ய உள்ளார்.
லோக்சபாவில் நிலைமை இப்படி இருக்கிறது. ஆனால் ராஜ்யசபாவில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டு வருகிறது. மணிப்பூர் வன்முறை பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்படாததால் தொடர்ந்து அங்கும் சபை முடங்கி வருகிறது. இதற்கிடையே தான் இன்று ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கரை, வடகிழக்கு மாநில எம்பிக்கள் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
அதாவது ராஜ்யசபாவில் மணிப்பூர் வன்முறை குறித்து விதி 176 ன் கீழ் விவாதிக்க வேண்டும் என அவர்கள் கூறினர். காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் விதி 267 ன் கீழ் விவாதிக்க வேண்டும் என கூறி வரும் நிலையில் வடகிழக்கு மாநில எம்பிக்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றி உள்ளனர். விதி 176 என்பது ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றி இரண்டரை மணிநேரத்துக்குள் குறுகிய காலத்தில் விவாதம் நடத்துவதை அடிப்படையாக கொண்டது.
மாறாக விதி 267 என்பது நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட நாளில் அனைத்து அலுவல் பணிகளையும் நிறுத்திவிட்டு ஒரு பிரச்சனையை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க அனுமதி வழங்குவதாகும். விதி 267 ன் கீழ் ராஜ்யசபாவில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படாமல் உள்ளது. இதனால் மணிப்பூர் பிரச்சனை பற்றி விவாதிக்க முடியாமல் போகும் சூழல் உள்ளது. இத்தகைய சூழலில் தான் இரண்டரை மணிநேரத்துக்குள்ளாக விவாதம் நடத்தும் வகையில் விதி 176 ன் கீழ் விவாதிக்க வேண்டும் என வடகிழக்கு மாநில எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications