ஆம் ஆத்மிக்கு பெரிய சிக்கல்! நாளை ஜாமீன் மனு விசாரணை!இன்றே மணிஷ் சிசோடியாவை கைது செய்த அமலாக்க துறை
மதுபான கொள்கை வழக்கில் அமலாக்க துறை முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை ஏற்கனவே சிபிஐ கைது செய்துள்ள நிலையில், இப்போது அவரை அமலாக்கத் துறையும் கைது செய்துள்ளது.
டெல்லியில் இப்போது அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்குத் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா மீது மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஊழல் புகார் வைக்கப்பட்டது.
அதாவது மதுபான விற்பனையில் தனியாருக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் கடந்த 26-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜரான இவர், 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

மணிஷ் சிசோடியா
அவரிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனு நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்தச் சூழலில், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையும் அவரை இப்போது கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி திகார் சிறையில் உள்ள அவரை இப்போது அமலாக்கத் துறையும் கைது செய்துள்ளது.

அமலாக்க துறை கைது
புதிய மதுபானக் கொள்கையை உருவாக்குவதில் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மணிஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்திய நிலையில், இப்போது கைது செய்துள்ளனர். முன்னதாக டெல்லியில் மணிஷ் சிசோடியா கொண்டு வந்த புது மதுபான கொள்கை குறித்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்த அந்த மதுபான கொள்கையும் ரத்து செய்யப்பட்ட நிலையில் தான், இதெல்லாம் நடந்துள்ளது.

சிக்கல்
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வரும் சிசோடியா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், அமலாக்கத் துறையும் அவரை கைது செய்துள்ளது நிலைமை சிக்கலாக்கியுள்ளது. அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப். 26ஆம் தேதி வரை அவரை சிபிஐ விசாரித்த நிலையில், அதன் பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
இது தொடர்பாக இந்தியில் ட்வீட் செய்துள்ள அவர், "மனிஷை முதலில் சிபிஐ கைது செய்தது. சிபிஐக்கு எந்தவொரு ஆதாரம் கிடைக்கவில்லை, ரெய்டில் பணமும் கிடைக்கவில்லை. நாளை அவரது ஜாமீன் வழக்கு விசாரணை உள்ளது. மணிஷ் நாளை விடுவிக்கப்பட்டிருப்பார். எனவே இன்று அவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அவர்களின் நோக்கம் ஒன்று தான். ஒவ்வொரு நாளும் புதிய போலி வழக்குகளைப் பதிவு செய்து எப்படியாவது மணிஷை உள்ளே வைத்திருக்க வேண்டும் என்பதை அவரது நோக்கம். மக்கள் இதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் பதில் சொல்வார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

சம்மன்
அதேநேரம் பாஜக இந்த மணிஷ் சிசோடியா மீதான நடவடிக்கையில் தப்பில்லை என்றே கூறி வருகிறது. ஆம் ஆத்மி கட்சி எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் புது மதுக் கொள்கையைத் திரும்பப் பெற்றிருக்காது என்பது அவர்கள் வாதம். அதேபோல டெல்லி மதுக் கொள்கை தொடர்பாக தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) தலைவரும், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், கவிதாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வரும் மார்ச் 11இல் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications