வீடு, நகை, மாருதி 800.. நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றிய மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு?
டெல்லி: நமது நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரியளவில் வளர காரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அதற்கு 1991இல் அவர் கொண்டு வந்த தாராளமயமாக்கல் கொள்கை முக்கிய காரணம். இந்தியப் பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். அப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எனப் பல திட்டங்களை அவர் கொண்டு வந்திருந்தார்.

மன்மோகன் சிங்:
அதற்கு முன்னதாகவே 1991ல் நரசிம்ம ராவ் பிரமதராக இருந்த போது மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார். அப்போது தான் அவர் தாராளமயமாக்கல் கொள்கையை நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார். இந்தியா இப்போது வரை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், அதற்கு முக்கிய காரணம் மன்மோகன் சிங்கின் இந்த தாராளமயமாக்கல் கொள்கை தான்.
இப்படிப் பல முக்கிய திட்டங்களைக் கொண்டு வந்த மன்மோகன் சிங் நேற்றைய தினம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. நாட்டின் பொருளாதாரம் பாயக் காரணமாக இருந்த மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பிரமாண பத்திரம்:
கடந்த மன்மோகன் சிங் கடைசியாகக் கடந்த 2019ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. மன்மோகன் சிங்கின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ 15.77 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்குக் கடன் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2017-18ம் ஆண்டு அவரது ஆண்டு வருமானம் ரூ.70 லட்சமாக இருந்த நிலையில், 2018-2019ம் ஆண்டில் அவரது ஆண்டு வருமானம் ரூ.89.42 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், அப்போது மன்மோகன் சிங்கிடம் கைவசம் 30,000 ரூபாயும், அவரது மனைவியிடம் 20,000 ரூபாயும் ரொக்கமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து மதிப்பு:
மேலும், தன்னிடம் தங்க நகை எதுவும் இல்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். அதேநேரம் மனைவியிடம் 150.8 கிராம் தங்கம், அன்றைய மதிப்பில் (ரூ.3.86 லட்சம்) தங்க நகைகளும் இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார். மேலும், வங்கிக் கணக்குகளிலும் அவரது பெயரில் கணிசமான தொகை இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இப்படி மொத்தம் அவரது பெயரில் 7.67 கோடி ரூபாய் இருந்துள்ளது. அதேபோல அவரது மனைவி பெயரில் ரூ 22.73 லட்ச ரூபாய் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியிருப்புகள்:
மேலும், குடியிருப்புகளைப் பொறுத்தவரை மன்மோகன் சிங்கிற்கு சண்டிகர் மற்றும் டெல்லியில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை இருக்கிறது. சண்டிகரில் உள்ள அவரது இல்லத்தை அவர் ரூ.8.62 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார். 20019ல் அதன் மதிப்பு ரூ.5.64 கோடி என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல டெல்லியிலும் மன்மோகன் சிங்கிற்கு ஒரு இல்லம் இருக்கிறது. அதை அவர் ரூ.4.18 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தார். அதன் மதிப்பு ரூ.2.23 கோடியாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக அவரிடம் இருந்த சொத்துகளின் மதிப்பு ரூ.7.87 கோடி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
முன்பு 2013 தேர்தல் பிரமாண பத்திரத்தில் மன்மோகன் சிங் தன்னிடம் மாருதி 800 கார் இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பங்குகள், பத்திரங்கள் அல்லது பரஸ்பர நிதிகளில் தான் முதலீடு செய்யவில்லை என்றும் மன்மோகன் சிங் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தார். இப்போது ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சந்தை மதிப்பிற்கு ஏற்ப அவரது சொத்து மதிப்பு சற்று உயர்ந்து இருக்கும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications