மதுரை ஆசிரியை சுபஶ்ரீயின் மூலிகைப் பூங்கா.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு!
டெல்லி: மதுரை வரிச்சியூர் அருகே ஆசிரியர் சுபஶ்ரீ உருவாக்கி இருக்கும் மூலிகைப் பூங்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் ஆசிரியை சுபஶ்ரீயின் மூலிகைப் பூங்காவை பாராட்டிப் பேசினார்.
பிரதமர் மோடி தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசியதாவது: நமதருகே இருப்போர் சிலர், பேரிடர்க்காலங்களில் தங்கள் பொறுமையை இழப்பதில்லை, மாறாக அதிலிருந்து கற்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் பெயர் சுபஸ்ரீ. இவர் தனது முயற்சியின் துணையால், கடினமான மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகளால் ஒரு அற்புதமான பூங்காவை உருவாக்கி இருக்கிறார்.

இவர் தமிழ்நாட்டின் மதுரையில் வசிப்பவர். இவர் தொழில்ரீதியாக ஆசிரியையாக இருந்தாலும், மருத்துவத் தாவரங்களின்பால் இவருக்கு அலாதியான பிரியம் இருக்கிறது. இவருடைய இந்த ஈடுபாடு, 1980களில் தொடங்கியது; ஒரு முறை இவருடைய தந்தையாரை நச்சுப்பாம்பு ஒன்று தீண்டிய போது, பாரம்பரியமான மூலிகைகள்-தாவரங்களைக் கோண்டு உடல்நலம் மீட்சி பெறுவதில் உதவிகரமாக இருந்தது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாரம்பரியமான மருத்துவத் தாவரங்களைப் பற்றிய தேடலைத் தொடக்கினார் இவர். இன்று மதுரையின் வரிச்சியூர் கிராமத்தில் இருக்கும் இவருடைய வித்தியாசமான மூலிகைப் பூங்காவிலே 500க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகைச் செடிகள் இருக்கின்றன. தனது இந்தப் பூங்காவைத் உருவாக்க இவர் தீவிரமாக உழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு தாவரத்தையும் தேடித்தேடி இவர் தொலைதூரங்களுக்குப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார், தகவல்களைத் திரட்டி இருக்கிறார், பலமுறை மற்றவர்களிடம் உதவிகளையும் கோரியிருக்கிறார்.
கோவிட் காலத்தில், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கக்கூடிய மருத்துவ மூலிகைகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார். இன்று இவருடைய இந்த மூலிகைப் பூங்காவைக் காண தொலைவான பகுதிகளிலிருந்தும் பலர் வருகிறார்கள். இவர் அனைவருக்கும் மருத்துவத் தாவரங்களைப் பற்றிய தகவல்களையும், அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் விளக்குகிறார். சுபஸ்ரீ அவர்கள், பலநூறு ஆண்டுகள் நமது கலாச்சாரத்தின் அங்கமாக விளங்கும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். அவருடைய மூலிகைப் பூங்காவானது, நமது கடந்தகாலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறது, அவருக்கு நம்முடைய பலப்பல நல்வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications