கொரோனா டெஸ்ட் எடுக்க மக்கள் அச்சப்படுகிறார்கள்.. பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.. மருத்துவர்கள் கவலை
டெல்லி: தனிமைப்படுத்திவிடுவார்கள் என அஞ்சி கொரோனா பரிசோதனைக்கு பலரும் முன்வருவது இல்லை என்றும் இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்தது. தனி மனித இடைவெளி, முக கவசம், லாக் டவுன் என எதற்கும் கட்டுப்படாத கொரோனா கடைசியாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகே ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவல் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது.

அதாவது, தற்போது உலகின் பல நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் JN1 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் கொரோனா அதிகம் பரவியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடந்த 227 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல் நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கிடுகிடுவென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை நேற்று 636 ஆக குறைந்தது. இதனிடையே, உண்மையான கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்றும், மக்கள் கொரோனா பரிசோதனை எடுக்க முன்வருவது இல்லை எனவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகவில் இன்று முதல் தடுப்பூசி போடப்பட உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்- ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என கர்நாடகா உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டோர் முன் களப் பணியாளர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடப்படும் எனவும் கூறியுள்ளது. தடுப்பூசி போட விரும்புவோர் ஆதார் கார்டு எண்ணை கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜேஎன் 1 வகை கொரோனா வேகமாகப் பரவினாலும் கூட அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே, இந்த புதிய வகை கொரோனா பாதிப்பைக் கண்டு பொதுமக்கள் பயப்பட வேண்டாம். இந்த புதிய கொரோனா லேசான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்ற போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணியலாம். குறிப்பாக இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications