மருத்துவக் கல்லூரி மாணவியை சீரழித்த கயவர்கள்.. மேற்கு வங்கத்தில் தொடரும் அட்டூழியம்!
கொல்கத்தா: கல்லூரியை விட்டு இரவு வெளியே வந்தபோது, மர்ம நபர் ஒருவர் மாணவியை தூக்கி சென்று அருகில் இருந்த மறைவான இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஒடிசாவின் ஜலேஸ்வரைச் சேர்ந்தவர். மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய தொழில் நகரமான துர்காப்பூரில், ஷோபப்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இவர் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.

நேற்றிரவு 8.30 மணியளவில், தனது ஆண் நண்பருடன் வளாகத்தை விட்டு வெளியே சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. வளாக வாயிலுக்கு அருகே, ஒருவர் அவரை மருத்துவமனைக்கு பின்னால் உள்ள ஒரு மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் அவருடன் சென்ற நண்பர் உட்பட பலரை போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும், காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. சம்பவத்தின் முழுமையான விவரங்களை அறிய பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவியின் தந்தை, தனது மகளின் நண்பர் மூலம் இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். "நான் அங்கு சென்றபோது, என் மகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை" என்று அவர் குற்றம் சாட்டினார்.
"அவள் கல்லூரி வளாக வாயிலை அடைந்தபோது, அங்கு நான்கு முதல் ஐந்து பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் அவளை பாலியல் வன்கொடுமை செய்து, அவளது மொபைல் போனை பறித்துக்கொண்டார். அதைத் திருப்பிக் கொடுக்க ₹3,000 கேட்டிருக்கிறார். தனது மகளை ஒரு மருத்துவராக பார்க்க வேண்டும் என்ற கனவுடன் கல்லூரியில் சேர்த்தேன். ஆனால், இப்போது இந்த கோலத்தில் அவரை பார்ப்பேன் என எதிர்பார்க்கவில்லை. என் மகளுக்கு நீதி வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. வளாகத்தில் சரியான பாதுகாப்பு இல்லை" என்று தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் அரசு, பாலியல் வன்கொடுமை வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம், காஸ்பாவில் உள்ள தெற்கு கல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் ஒரு சட்ட மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் நகர பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஆர்.ஜி.கார் எனும் மருத்துவமனை வளாகத்திற்குள் வைத்து, மருவத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். மருத்துவமனை வளாகத்திற்குள்ளே கூட, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனில், வேறு எங்கு பாதுகாப்பு இருக்கும்? என்று மக்கள் கொந்தளித்திருந்தனர். மேற்கு வங்கம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் காஸ்பாவில் உள்ள தெற்கு கல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்திற்குள், இதேபோல சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது மருத்துவக்கல்லூரி மாணவி வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications