நேபாள நாட்டவர் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்.. பின்னணி என்ன? உள்துறை அமைச்சகம் விளக்கம்
டெல்லி: ஜெர்மனி நாட்டின் பெர்லினுக்கு செல்லும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர், டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு காத்மண்டுவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த சம்பவத்தில் இந்திய குடியேற்ற அதிகாரிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், விமான நிறுவனம், அவரை காத்மண்டுவிற்கு திருப்பி அனுப்பி உள்ளது என்றும் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேபாள நாட்டைச் சேர்ந்த ஷாம்பவி அதிகாரி காத்மண்டுவிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்து டெல்லி வழியாக பெர்லினுக்கு செல்ல பயணித்துக் கொண்டிருந்தார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் ஏறும் போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரது விசா செல்லுபடியை கருத்தில் கொண்டு, ஜெர்மனிக்கு அவரது பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்த விமான நிறுவனம், அவரை காத்மண்டுவிற்கு திருப்பி அனுப்பி உள்ளது. இந்திய குடியேற்ற அதிகாரிகள், அவரை தடுத்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பெர்லினுக்கு செல்லும் நேபாள குடிமகனான ஷாம்பவி அதிகாரி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு காத்மாண்டுவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் (MHA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இந்த சம்பவம் நேபாள குடிமக்களுக்கு எதிரான பாகுபாடு என்று தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த முழு சம்பவத்திலும் இந்திய குடியேற்ற அதிகாரிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காகவே இது.
இதுபோன்ற விஷயங்கள் பொதுவாக சேருமிட நாட்டின் விதிகள்/ தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகின்றன. பின்னர் அந்தப் பயணி தனது பயணத் தேதிகளை மாற்றி அமைத்து, பின்னர் காத்மண்டுவிலிருந்து வேறு பாதையில் பெர்லினுக்கு பயணம் செய்தார்.
சர்வதேச போக்குவரத்து பயணிகள் தங்கள் அடுத்த பயணத்திற்காக இந்திய குடியேற்ற அதிகாரிகளை அணுக வேண்டிய அவசியமில்லை. இது விமான நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் இடையிலான விஷயம். இந்திய குடியேற்ற அதிகாரிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"நேபாளத்துடனான அதன் வலுவான உறவை இந்தியா மதிக்கிறது, மேலும் எந்தவொரு இந்திய அதிகாரியும் நேபாள குடிமக்களுக்கு எதிராக எந்தவிதமான சார்பையும் அல்லது பாகுபாட்டையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதியளிக்கிறது" என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications