முடங்கிய மைக்ரோசாப்ட்.. இந்தியாவில் அடுத்தடுத்து ரத்தான விமானங்கள்.. அடுத்து என்ன நடக்குமோ!
டெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு சாப்ட்வேர்கள் முடங்கியுள்ளதால் உலகெங்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அது இந்திய விமான போக்குவரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 விமானங்கள் தாமதமாகியுள்ளன. மைக்ரோசாப்ட் சிக்கல் சரி செய்யப்படவில்லை என்றால் நிலைமை மேலும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது.
இன்று காலை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு சாப்ட்வேர்களில் உலகளாவிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக அவுட்லுக் மெயில் சர்வீஸ் மற்றும் டீம்ஸ் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவதில் பலரும் சிக்கல்களை சந்தித்தனர்.

விமான சேவை பாதிப்பு
இதனால் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் சூழலில், இது இந்திய விமான போக்குவரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 3 ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்- டெல்லி - புனே, டெல்லி - லே, டெல்லி - மும்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர டெல்லி - தர்பங்கா மற்றும் டெல்லி - மும்பை இடையிலான இரண்டு விமானங்கள் தாமதமாகியுள்ளன.
ஏர் இந்தியாவில் இதுவரை எந்தவொரு பாதிப்பும் இல்லை. எல்லாம் வழக்கம் போலவே இயங்குவதாக கூறினாலும், மைக்ரோசாப்ட் பிரச்சினையை கவனமாக கண்காணித்து வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. பயணிகளின் மெயில்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக தற்காலிகமாக மாற்று வழிகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இதுவரை தங்கள் சேவையில் எந்தவொரு இடையூறும் இல்லை எனவும் 24 மணி நேரத்திற்குள் ரெஸ்பான்ட் செய்து வருவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
அறிவுறுத்தல்கள்
இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களும் பயணிகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன. விமானம் தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு விமானம் குறித்த தகவல்களை சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. டெல்லி விமான நிலையமும் இதேபோல பயணிகளுக்கு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
முடக்கம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு சர்வீஸ்கள் உலகளவில் முடங்கியது. குறிப்பாக அவுட்லுக் மெயில் சேவை மற்றும் டீம்ஸ் பயன்படுத்துவதில் பலரும் சிக்கல்களை சந்தித்தனர். பிரச்சினையை ஆய்வு செய்து வருவதாகவும் சரி செய்ய தொடர்ந்து முயன்று வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த பிரச்சினைக்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவான விளக்கம் எதையும் தரவில்லை. மேலும், தற்காலிகமாக பாதிப்பைக் குறைப்பதற்கான அனைத்து வழிகளையும் ஆய்வு செய்து வருவதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விமான சேவை
இதனால் இந்தியாவில் விமான சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று கூற முடியாது. இப்போதைக்கு டெல்லியில் மட்டும் அதுவும் ஒரு சில விமானங்களின் சேவை மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், விமான ரத்து என்பது தொடங்கிவிட்ட நிலையில், பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படும் முன்பே தங்களது விமானத்தின் தற்போதைய நிலையை சரிபார்த்துக் கொள்வது அவசியமாகியுள்ளது. இல்லையென்றால் பயணிகளுக்கு தான் தேவையில்லாத அலைச்சல்! மைக்ரோசாப்ட் நிறுவனம் உடனடியாக பிரச்சினையை சரி செய்யவில்லை என்றால் நிலைமை மேலும் மோசமாகும் எனவும் அஞ்சப்படுகிறது.




Click it and Unblock the Notifications
