இந்தியாவுக்கு ரூ.18,000 கோடி நஷ்டம்! கச்சா எண்ணெய் ஒரே ஒரு டாலர் உயர்ந்தாலும் மிக மோசமான பாதிப்பு!
டெல்லி: இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால், இந்திய பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கிறது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள இந்த ஸ்திரமற்ற சூழல், இந்தியா போன்ற கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இஸ்ரேல்- ஈரான் இடையேயான நீடித்த மோதல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இது அரசின் நிதிநிலைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும், அங்கிருந்து நமக்குக் கிடைக்கும் வருவாயும் குறைந்தால் அது நமது பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சூழலில், பிரதமர் அலுவலகம் முக்கிய அமைச்சகங்களுடன் இணைந்து நிலைமையை ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கச்சா எண்ணெய் சப்ளை பாதிப்பு
மத்திய கிழக்கு மோதல்களால் சப்ளை பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து, கடந்த பல மாதங்களில் இல்லாத உச்சத்தை அடைந்தன. உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் சுமார் 5% ஈரானிலிருந்து கிடைக்கிறது. இதன் விநியோகம் முழுமையாகத் தடைப்பட்டால் விலை சுமார் 20% அதிகரிக்கக்கூடும்.
உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது. இந்த நீர் வழிப்பாதை மூடப்பட்டால், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 108 டாலர் வரை உயரலாம். இத்தகைய விலை உயர்வு நீடித்தால், கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகள் பாதிக்கப்படும். அதேநேரம் ரஷ்யா, கனடா, நார்வே போன்ற கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் ஆதாயம் பெறுவார்கள்.
ஒரு டாலர் உயர்ந்தாலும்!
இந்தியாவைப் பொறுத்தவரை, கச்சா எண்ணெய் விலையில் பேரலுக்கு ஒரு 1 டாலர் அதிகரித்தாலும், ஆண்டு இறக்குமதிச் செலவு சுமார் 2 பில்லியன் டாலர் அதிகரிக்கும். இதனால் டிரேட் பேலன்ஸுக்கு அழுத்தம் ஏற்படும். பெட்ரோல் டீசல் மட்டுமின்றி பெயிண்ட், டயர், விமானப் போக்குவரத்து, ரசாயனத் துறைகளிலும் இதன் தாக்கம் இருக்கும். இதனால் அந்த துறைகளிலும் லாப வரம்புகள் பாதிக்கப்படும்.
இந்த மோதலை பொறுத்தவரைக் கப்பல் போக்குவரத்து அபாயங்கள் தான் தீவிரமடைந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிகளில், எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு டேங்கர்களும் உட்பட 200க்கும் மேற்பட்ட கப்பல்கள் நிற்கின்றன. மோதல் தொடர்வதால், அந்த கப்பல்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் சப்ளை பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் கச்சா எண்ணெய் விலை இந்த ஒரே வாரத்தில் பீப்பாய்க்கு 80 முதல் 90 டாலர் வரை போகலாம் என அஞ்சப்படுகிறது.
ஓபெக் நாடுகள் எடுத்த முடிவு
இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, OPEC+ கூட்டமைப்பு ஒரு முக்கிய முடிவை அறிவித்தது. நிச்சயமற்ற சூழல் காரணமாக ஏப்ரல் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 206,000 பீப்பாய்கள் என்ற அளவில் எண்ணெய் உற்பத்தியைச் சற்றே அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இது சந்தை பதற்றத்தை ஓரளவு தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஹார்முஸ் ஜலசந்தி ரொம்பவே முக்கியமானது. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% இந்த வழியே செல்கிறது. மேலும் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40%க்கும் மேல் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. இங்கு ஏற்படும் எந்தவொரு நீண்டகால பாதிப்பும், இந்தியாவில் கச்சா பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும். மேலும், பணவீக்கத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.
எண்ணெய் டேங்கர்கள்
சில சமயங்களில் எண்ணெய் டேங்கர்கள் மாற்று வழிகளில் செல்ல முடிந்தாலும், அவை அதிக பயண நேரத்தையும் அதிக செலவுகளையும் ஏற்படுத்தும். மேலும், செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி, ஏமனின் ஹவுதி தாக்குதல்களால் ஏற்கனவே அழுத்தத்தில் உள்ளது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை உயரும் சூழல் உருவாகலாம். அரசு தற்காலிகமாக வரி குறைப்புகள் அல்லது மானியங்கள் மூலம் ஒரு பங்கை ஈடுகட்டினாலும், தொடர்ந்து விலை ஏறுவது அரசின் நிதிநிலையைக் கடுமையாகப் பாதிக்கும். இது நிதிப் பற்றாக்குறை அரசின் திட்டங்களைப் பாதிக்கும். எரிபொருள் மானியங்கள் அதிகரித்தால், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவுகள் குறைக்கப்படலாம்!
எல்என்ஜி இறக்குமதி
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் பிரச்சனை கச்சா எண்ணெய் விலையைப் பீப்பாய்க்கு 90 டாலருக்கு மேல் உயர்த்தும். அதேசமயம், அங்குப் பிராந்திய மோதல் ஏற்பட்டால், விலை 100 டாலருக்கு மேல் சென்றுவிடும் அபாயம் உள்ளது. இதுவே நமக்குப் பெரிய தலைவலி தான். ஆனால், கச்சா எண்ணெய்யைத் தாண்டி இன்னொரு பெரிய தலைவலி இருக்கிறது. அதுதான் எல்என்ஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதி. எல்என்ஜி இறக்குமதியிலும் நாம் வளைகுடா நாடுகளையே சார்ந்து இருக்கிறோம்.
சுமார் 80% LNG கொள்முதல் இந்த பிராந்தியத்திலிருந்து வருவதோடு, அதில் 60% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்கிறது. கப்பல் போக்குவரத்தில் சிறிதளவு ஏற்படும் தடங்கல்கள் கூட இந்தியாவில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் சவால்கள்
நிலைமையைச் சமாளிக்க இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ரஷ்யா, அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அதிக எண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டியிருக்கலாம். மேலும், உடனடியாக ஏற்படும் அதிர்ச்சிகளைச் சமாளிக்க எமர்ஜென்சி காலங்களுக்காக வைத்திருக்கும் இருப்புகளையும் பயன்படுத்தக்கூடும். எனினும், இதுபோன்ற மாற்று வழிகள் செலவுகளையும், பயண நேரத்தையும் அதிகரிக்கும்.
இந்த எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் பணவீக்கத்திற்குச் சவாலாக அமைகிறது. கடந்த ஓராண்டாகப் பணவீக்கம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு நிலைமையை மோசமாக்கும். ஏனென்றால் கச்சா எண்ணெய் உயர்வு போக்குவரத்துச் செலவுகள், உணவு மற்றும் உற்பத்தி செலவுகளை அதிகரிக்கும். இது ஒட்டுமொத்த பணவீக்கத்தையும் உயர்த்தும்.
அனைவரையும் பாதிக்கும்
பணவீக்கம் உயர்வது விலைவாசி உயர்வோடு நிற்காது.. மாறாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்து எடுக்கும் முடிவுகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். பணவீக்கம் அதிகரித்தால் ரிசர்வ் வங்கியால் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாது. இது சாதாரண ஹோம் லோன் வாங்கிய நபர்களையும் பாதிக்கும்.
மேலும், இந்த மோதல் இந்தியாவின் ரூபாயின் மதிப்பையும் பாதிக்கக்கூடும். எண்ணெய் விலையில் ஏற்படும் உயர்வு, அதிகரித்து வரும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் உலகளாவிய அளவில் 'ரிஸ்க்-ஆஃப்' மனநிலை ஆகியவை ரூபாயின் மதிப்பை மேலும் பலவீனப்படுத்தும் என அஞ்சப்படுகிறது. ஜனவரி மாத இறுதியில் ரூபாய் ஒரு டாலருக்கு 92 என்ற வரலாற்று குறைந்த அளவை எட்டியது. 2025 ஆம் ஆண்டில் ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்பட்ட நாணயமாகவும் இந்திய ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கு ஆசியாவில் இருந்து உருவாகும் புதிய பதற்றம் ரூபாயின் சமீபத்திய ஸ்திரத்தன்மையை மாற்றியமைக்கும் வாய்ப்புள்ளது.
தங்கம் & வைரம்
அமீரக வான்வெளியும் மூடப்பட்டுள்ளதால், துபாய் வழியாக வரும் தங்கம் மற்றும் பாலிஷ் செய்யப்படாத வைரங்களின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்படலாம். இந்தியாவுக்கு பாலிஷ் செய்யப்படாத வைரங்களை வழங்கும் முதன்மை நாடாகவும், தங்கத்தை வழங்கும் இரண்டாவது துபாய் இருக்கிறது. ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படும் சுமார் 800-850 டன் தங்கத்தில் 50-60% துபாய் வழியாகவே இந்தியாவை வந்தடைகிறது.
இப்படி மத்திய கிழக்கில் ஏற்படும் மோதல்கள் ஒவ்வொன்றும் பல்வேறு வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியாவைப் பாதிக்கவே செய்கிறது.
-
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை












Click it and Unblock the Notifications