உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு! உச்சநீதிமன்றத்தில் மிலானி கேவியட் மனு தாக்கல்!
டெல்லி: தேனியை சேர்ந்த மிலானி உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வழக்கு விசாரணை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்பதால், மிலானி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து, தொகுதியில் போட்டியிட்ட மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி ஜி.அருள்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 45 நாட்கள் அவகாசத்துக்குள் இந்த தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
2026 மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 45 நாட்கள் காலக்கெடுவின்படி, ஜூன் 17 ஆம் தேதி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், 45 நாட்களுக்கு பிறகு ஜூன் 18 ஆம் தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் வாதிட்டார்.

சிறப்பு சட்டமான மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், உச்ச நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு பிறப்பித்துள்ள தீர்ப்பின்படியும், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து, தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான 45 நாட்கள் அவகாசம் துவங்குகிறது என வாதிட்டார்.
தேர்தல் வழக்கு தாக்கல் செய்த மிலானி தரப்பில், குறித்த காலக்கெடுவுக்குள் தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற பதிவுத்துறை அதை ஏற்று எண்ணிட்டுள்ளதால், வழக்கில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என வாதிடப்பட்டது. தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான வாதங்களைக் கேட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.
இதற்கிடையில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது மிலானியின் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகவும், டிசம்பர் 11ஆம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென உதயநிதி தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வழக்கில் எந்த உத்தரவு பிறப்பிக்க கூடாது என மிலானி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை மிலானி தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேஷ் தாக்கல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications
