அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகள் வெறியாட்டம்.. நடுரோட்டில் எம்எல்ஏ, குடும்பத்தோடு சுட்டுக் கொலை
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் காரில் பயணித்த எம்எல்ஏ மற்றும் 11 பேர் பட்டப் பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கோன்சா மேற்கு தொகுதி எம்எல்ஏ திரோங் அபோ சுட்டுக் கொல்லப்பட்டவராகும். இன்று காலை சுமார் 11.30 மணிக்கு போராப்பள்ளி என்ற பகுதியில் தனது குடும்பத்தார் மற்றும் பாதுகாவலர்களுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார், திரோங் அபோ. அப்போது திடீரென தீவிரவாத கும்பல் ஒன்று இந்த காரை வழி மறித்துள்ளது. இதன்பிறகு திரோங் அபோ, அவரது குடும்பத்தார் மற்றும் அவரது பாதுகாவலர்களை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டது அந்த கும்பல்.

இந்த சம்பவத்தில் எம்எல்ஏ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேரும் கொல்லப்பட்டனர்.
என்எஸ்சிஎன் தீவிரவாத அமைப்பினரிடமிருந்து திரோங் அபோவிற்கு ஏற்கனவே பலமுறை மிரட்டல்கள் வந்துள்ளன. எனவே அந்த தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்க கூடும் என தெரிகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, தேசிய மக்கள் கட்சி தலவைரும் மேகாலயா முதல்வருமான கன்ராட் சங்மா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் நேரடியாக இந்த விவகாரத்தை மேற்பார்வையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனிடையே சம்பவ இடத்தில் தீவிரவாதிகளை தேடிபிடிக்க அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டு காவல்துறைக்கு, உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications