சீனாவுக்கு ஷாக்.. ராணுவத்தில் முழு கவனம் செலுத்தும் மோடி 3.O அரசு! நிழகப்போகும் பெரும் மாற்றங்கள்
டெல்லி: லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் இந்த முறை ராணுவத்தை பலப்படுத்தும் பணிகளில் அரசு தீவிர கவனம் செலுத்த இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து நிலையில், ஜூன் 9ம் தேதி மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடன் 72 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில் இந்த முறை ராணுவத்தில் முழு கவனம் செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இந்த ஆண்டு ராணுவம் மிகப்பெரிய சீர்திருத்தத்தை எதிர்கொள்ள இருக்கிறது. அடுத்த ஆண்டு மூன்று மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால், ஒரு மாதக்காலம் மேலும் பதிவிக்காலம் நீடிக்கப்பட்டது.
இப்படியாக ஜெனரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இந்த மாதத்தடன் முடிவடைகிறது. எனவே அடுத்த ஜெனரல் குறித்த முக்கிய முடிவு விரைவில் எடுக்கப்பட இருக்கிறது" என்று கூறியுள்ளார். துணைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி அடுத்த ராணுவ தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம் புதியதாக 100 K-9 வஜ்ரா ஹோவிட்சர்களை ராணுவத்திற்காக வாங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இது குறித்தும் இந்த மாதத்தில் முடிவெடுக்கப்படும். இந்த வகை வாகனங்கள் பாலைவனப்பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இருப்பினும் சீனா உடனான மோதல்கள் அதிகரிக்க தொடங்கியதிலிருந்து இதன் தேவையும் அதிகரித்திருக்கிறது. எல்லா சூழலுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த வாகனம் எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இதற்கு முன்னர் இந்த பாதுகாப்பு வாகனங்களை வாங்கியிருக்கிறோம். கடந்த 2017ம் ஆண்டில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் K-9 வஜ்ராவின் 100 வாகனங்களை வழங்குவதற்காக ரூ 4,500-கோடி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை L&T எடுத்திருந்தது. இந்நிறுவனம் தென் கொரிய நிறுவனமான ஹன்வா கார்ப்பரேஷனுடன் இணைந்து வாகனங்களை உருவாக்கியது. அதாவது இந்த வாகனங்கள் 80% உள்நாட்டிலும் 20% வெளிநாட்டின் உதவியாலும் கட்டமைக்கப்படும்.
இதுதவிர, மூன்று ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 26 ரஃபேல் எம் போர் விமானங்களுக்கான ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது.
மேலும் அக்னிபாத் திட்டத்தில் பெரும் மாற்றம் கொண்டுவரப்பட இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கியுள்ளன. மோடி 3.O கூட்டணியில் உள்ள கட்சிகள் அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளன. எனவே, தற்போது 4 ஆண்டுகள் என இருக்கும் கால அளவை கூடுதலாக்க திட்டமிப்பட்டிருக்கின்றன. மேலும் தற்போது இருக்கும் செயல்முறையின்படி குறைந்த அளவில் அக்னிபாத் வீரர்கள் ராணுவத்தில் தக்கவைத்துக்கொள்ளப்படுவார்கள்.
ஆனால், இனி வரும் காலங்களில் அதிக அளவில் வீரர்கள் தக்கவைத்துக்கொள்ளப்படலாம். அதேபோல அவர்களுக்கான ஊதியம், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை வரும் காலங்களில் அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படியாக ராணுவ முறையில் மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன.












Click it and Unblock the Notifications