தூக்கியடிக்கப்படும் நிர்மலா சீதாராமன்? தர்மேந்திர பிரதான் உட்பட 6 அமைச்சர்கள் நீக்கம்? வெளியான தகவல்
டெல்லி: மோடி அமைச்சரவையில் இருந்து தர்மேந்திர பிரதான், ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட 6 அமைச்சர்கள் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இலாகா மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்னும் சில வாரங்களில் இந்த அமைச்சரவை மாற்றம் வரும் என தெரிகிறது.
மத்திய அமைச்சரவையில் இப்போது ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பலர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் சிலருக்கு இலாகா மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தர்மேந்திர பிரதான்
சங் பரிவார் அமைப்பில் இருந்து வந்தவர் தர்மேந்திர பிரதான்.. இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றியவர். தற்போது ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியின் லோக்சபா உறுப்பினராக இருக்கும் இவர், கடந்த 12 ஆண்டுகளாக மோடி அரசு அமைச்சரவையில் அமைச்சராக இருந்து வருகிறார். ஜூலை 2021 முதல் அவர் கல்வி அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.
அவரது பதவிக்காலத்தில் தொடர்ச்சியாக வெடிக்கும் சர்ச்சைகளே அவரது பதவி நீக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்கிறார்கள். குறிப்பாக, 2026 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடுகள், யுஜிசி சமத்துவ வழிகாட்டுதல் சர்ச்சை, 2024 யுஜிசி-நெட் வினாத்தாள் கசிவு மற்றும் 2020 தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் ஆகிய பிரச்சனைகளே முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.
ஹர்தீப் சிங் பூரி
ஹர்தீப் சிங் பூரி, 1974ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஓய்வு பெற்ற இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரி ஆவார். 2014இல் பாஜகவில் இணைந்த அவர், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். செப்டம்பர் 2017 முதல் மத்திய அமைச்சராக இருந்து வரும் அவர், தற்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையைக் கவனித்து வருகிறார்.
அவரது பெயர் சமீபத்தில் எப்ஸ்டீன் பைல்ஸ் சர்ச்சையோடு இணைத்துப் பேசப்பட்டது. குறிப்பாக, 2014 முதல் 2017 காலத்தில் அவர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு பல முறை மெயில் அனுப்பியுள்ளார் என்றும் 14 முறை அவரை நேரடியாகச் சந்தித்தார் என்றும் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது. இத்தோடு 74 வயதான பூரி, கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமைச்சராகப் பணியாற்றிய நிலையில், அவரது வயது மூப்பும் அவரது அமைச்சரவை பதவி பறிக்கப்படக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.
ரவ்னீத் சிங் பிட்டு
முன்னாள் பஞ்சாப் முதல்வர் பியந்த் சிங்கின் பேரனான ரவ்னீத் சிங் பிட்டு, காங்கிரஸ் சார்பில் மூன்று முறை லோக்சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2024 மார்ச் மாதம் பாஜகவில் இணைந்த பின்னர் அவர் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 2024இல் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் 17 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள அவர், இப்போது பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்த விரும்புகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகப் பிட்டு கூறியிருக்கிறார். இதன் காரணமாகவே ஜூன் 4ம் தேதி பாஜக வெளியிட்ட 11 மாநிலங்களவை வேட்பாளர்களின் பட்டியலில் பிட்டுவின் பெயர் இடம்பெறவில்லை. ஜூன் 21ம் தேதியுடன் அவரது மாநிலங்களவை பதவிக்காலமும் முடிவடைந்தது. அவர் பஞ்சாபில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கவுள்ளார். இதனால் அவர் மத்திய அமைச்சரவையில் இருந்து விடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.
பங்கஜ் சவுத்ரி
உபி மகாராஜ்கஞ்ச் தொகுதியில் இருந்து 7 முறை லோக்சபா எம்பியாக வென்ற பங்கஜ் சவுத்ரி, ஜூலை 2021 முதல் மத்திய நிதித்துறை இணை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். அவர் டிசம்பர் 2025இல் அவர் உத்தரப் பிரதேச பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். பாஜகவில் ஒருவருக்கு ஒரே பதவி என்ற ரூல்ஸ் இருப்பதால் பங்கஜ் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 2027 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2029 லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி பணிகளில் பங்கஜ் சவுத்ரி கவனம் செலுத்த இருக்கிறாராம்.
ஹர்ஷ் மல்ஹோத்ரா
இதேபோல ஹர்ஷ் மல்ஹோத்ராவும் ஒரு நபருக்கு ஒரே பதவி என்பதால் பதவியை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். 2015-16 காலகட்டத்தில் கிழக்கு டெல்லி மாநகராட்சியின் மேயராக இருந்த ஹர்ஷ் மல்ஹோத்ரா, 2024 லோக்சபா தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியிலிருந்து எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மோடி அமைச்சரவையில் இணை அமைச்சராகச் சேர்க்கப்பட்டார். அவர் கடந்த மாதம் டெல்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் பதவியை இழக்கவுள்ளார்.
ஜார்ஜ் குரியன்
உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த ஜார்ஜ் குரியன், ஜூன் 2024இல் மோடி அரசில் சிறுபான்மையினர் நலன் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் ஆகஸ்ட் 2024இல் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி அமைச்சரவையின் ஒரே கிறிஸ்துவ அமைச்சரான ஜார்ஜ் குரியன், ஜூன் 23ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். கேரள தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்ற தர முடியாததே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் அவரும் தனது அமைச்சர் பதவியை இழக்கவுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் 2014 முதல் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். 2017இல் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், 2019ல் இருந்து மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சராகவும் இருக்கிறார். பொருளாதாரம். பணவீக்கம் காரணமாக நிர்மலா சீதாராமன் கல்வி அமைச்சகத்திற்கு மாற்றப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜோதிராதித்ய சிந்தியா, பிரஹலாத் ஜோஷி ஆகியோரின் அமைச்சரவை இடங்களும் மாற்றப்படலாம் என தெரிகிறது.














Click it and Unblock the Notifications