விளம்பரம் தேடவே அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்துகின்றனர்.. எதிர்க்கட்சிகளை விளாசிய பிரதமர் மோடி
டெல்லி: காங்கிரஸ் எம்பிக்கள் கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தி பதவியேற்றுக்கொண்ட நிலையில், சிலர் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வதாக பிரதமர் மோடி விமர்சித்திருக்கிறார்.
18வது லோக்சபா தேர்தல் நிறைவடைந்த நிலையில், 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். தேர்தல் முடிந்து முதல் முறையாக ஜூன் 27ம் தேதி நாடாளுமன்றம் கூடியது. எம்பிக்கள் பதவியேற்ற நிலையில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இதனையடுத்து அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்றன.

இந்த விவாதத்தில் சுமார் 70 எம்பிக்கள் வரை பங்கெடுத்திருந்தனர். குறிப்பாக ராகுல் காந்தியின் உரை மிகுந்த கவனத்தை பெற்றிருந்தது. பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக ராகுல் காந்தி மத்திய அரசு மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை அடுக்கியிருந்தார். ஆனால், இவரது உரையிலிருந்து சில அம்சங்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்களின் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார்.
இதனையடுத்து இன்று மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி பதிலளித்து பேசியுள்ளார். அப்போது, "சிலர் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தி விளம்பரம் தேடிக்கொள்கின்றனர்" என்று விமர்சித்துள்ளார்.
அவர் பேசியதாவது, "கடந்த இரண்டரை நாட்களில், சுமார் 70 எம்பிக்கள் இந்த விவாதத்தில் பங்கேற்றனர். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து நீங்கள் செய்த பங்களிப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய வரலாற்றில் நமது நாடாளுமன்ற ஜனநாயகப் பயணத்தில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டு மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளனர். தேசிய ஜனநாக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. பொதுமக்கள் அளித்த இந்த தீர்ப்பை சிலர் திட்டமிட்டு களங்கப்படுத்த முயன்று வருகின்றனர்.
நாங்கள் மக்களுக்காக கடினமாக உழைக்க விரும்புகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்புகிறோம். இந்த காலகட்டத்தில் வறுமைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெறும். இந்த போராட்டத்தில் நாங்கள் வெற்றியும் பெறுவோம். இந்தியா சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய நாடாக மாறும்போது, அதன் தாக்கம் மக்கள் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்.
இந்திய மக்கள் ஏமாற்று அரசியலை புறக்கணித்து, நம்பிக்கை அரசியலுக்கு வாய்ப்பளித்துள்ளனர். சிலர் கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வைத்துக்கொண்டு விளம்பரம் தேடிக்கொள்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து பிரதமரின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த எம்பிக்களை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். "பொய்யை பரப்புவோருக்கு உண்மையை கேட்கும் சக்தி இல்லை. உண்மையை கேட்க விரும்பாமல் வெளிநடப்பு செய்வோர் ராஜ்யசபாவை அவமதிக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications